×

மருந்து பார்சலை டெலிவரி செய்யாத கொரியர் நிறுவனத்துக்கு 35 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மருந்து பார்சலை டெலிவரி செய்யாத கொரியர் நிறுவனத்துக்கு 35 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, தி.நகரில் மருந்து நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு பல மாநிலங்களில் கிளைகள் உள்ளது. இந்நிலையில், ஒடிசாவில் உள்ள கிளை அலுவலகத்துக்கு 44 ஆயிரம் மதிப்புள்ள மருந்துகளை அனுப்ப முடிவு செய்தனர். அதன்படி, பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு தி.நகரில் இயங்கி வரும் கொரியர் நிறுவனத்தில் இருந்து கடந்த 2011ம் ஆண்டு அனுப்பி உள்ளனர். அதற்கு 525 கட்டணம் செலுத்தியுள்ளனர். அதில், உயிர் காக்கும் மிக முக்கியமான மருந்துகள் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் கொரியர் நிறுவனமோ சரியான நேரத்தில் மருந்தை கிளை அலுவலகத்துக்கு கொண்டு சென்று சேர்க்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது தொலைந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மருந்து நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருந்தும் கொரியர் நிறுவனம் சரியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனையடுத்து சென்னையில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மருந்து நிறுவனம் சார்பில் உரிய இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி லக்‌ஷ்மிகாந்தம் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் மனுதாரருக்கு இழப்பு ஏற்பட்டதும், அதற்கு கொரியர் நிறுவனத்தின் கவனகுறைவே காரணம் என்பதும் தெளிவாக தெரியவந்துள்ளது. எனவே கொரியர் நிறுவனம் மனுதாரருக்கு 35 ஆயிரத்து 500 இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி உத்தரவிட்டார்.

Tags : courier company ,
× RELATED சட்டவிரோதமாக அரசியல் கட்சிகளுக்கு...