×

மாநகர மக்கள் வருகிற 10ம் தேதிக்குள் ஆழ்துளை கிணறுகள் குறித்த விவரத்தை வழங்க வேண்டும்: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரில் வசிக்கும் பொதுமக்கள் ஆழ்துளை கிணறு, குழாய் கிணறு போன்றவற்றை புதிதாக தோண்டும்போது நீர்வராத காரணத்தால் சரியாக மூடாமல் கைவிடுகின்றனர். இதனால் குழந்தைகள் அக்கிணறுகளில் விழுந்து உயிருக்கு போராடி இறக்கும் சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இது சம்மந்தமாக உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட பொது நல வழக்கிலான ஒரு தீர்ப்பாணையில், ‘உச்சநீதிமன்றம் இவ்வாறு குழந்தைகள் ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து இறப்பதைத் தடுக்க சில வழிமுறைகளை பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில், தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 2015ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.

அதன்படி, சென்னை மாநகரில் வசித்து வரும் பொது மக்கள் அனைவரும் தங்களது வீட்டில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளாகவோ அல்லது களிமண், மணல், கருங்கற்கள், கூழாங்கற்கள் கொண்டு தரை மட்டம் வரை மூட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் தொழில் நுட்ப ஆலோசணை பெற பொதுமக்கள் அருகில் உள்ள சென்னைக் குடிநீர் வாரிய பணிமனை அலுவலகம் அல்லது 044-28454080 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதுதவிர சென்னைப் பெருநகர நிலத்தடி நீர் ஒழுங்குப்படுத்தும் சட்டம் (1987)ல் உள்ள பிரிவு எண்.4ன் படி பொதுமக்கள் தங்கள் உபயோகத்திற்கு வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு, குழாய் கிணறு பற்றிய விவரங்களை தங்களது பிரிவுக்கு உட்பட்ட சென்னை குடிநீர் வாரிய பணிமனை  அலுவலகத்தில் அதற்குறிய படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வரும் 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது மிகவும் அவசியம் என்பதால் பொது மக்கள் அனைவரும் ஒத்துழைக்குமாறு சென்னை குடிநீர் வாரியம் கேட்டுக்கொள்கிறது.  தவறும் பட்சத்தில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Municipalities ,wells ,Chennai Drinking Water Board ,
× RELATED பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு