×

சட்டசேவை மையம் தொடங்க வேண்டும்

புதுச்சேரி, அக். 31: புதுச்சேரி முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் இயங்கி வரும் சட்ட சேவை மையத்தின் வரலாறு பிரிவு, ஐகியூஏசி மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணையமும் இணைந்து `மனித உரிமைகள் பாதுகாப்பு- இன்றைய இந்தியாவின் பார்வை’ என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கத்தை அஜந்தா சிக்னல் அருகிலுள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடத்தின. இதன் துவக்க விழாவுக்கு புதுச்சேரி மாநில மனித உரிமைக்குழு தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். அவர் பேசும்போது, மனித உரிமைகள் பாதுகாப்புக்கு அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. சட்டப்பணிகள் ஆணையமும் நிறைய விழிப்புணர்வுகளை செய்து வருகிறது. பாரதிதாசன் கல்லூரியை போல் மேலும் பல கல்லூரிகளிலும் சட்ட சேவை மையத்தை தொடங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான சோபனாதேவி சிறப்புரையாற்றினார். தொழில்நுட்ப கல்வித்துறை இயக்குநர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி உரையாற்றினார். கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் மெர்சி தேன்மொழி வரவேற்றார். நிறும செயலரியல் துறை உதவி பேராசிரியர் காயத்ரி விளக்க உரையாற்றினார். கருத்தரங்கின் அமைப்பு செயலாளரும், கல்லூரியின் சட்ட சேவை மைய சேர்மனுமான அலமேலுமங்கை நன்றி கூறினார். தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் இந்திய பொது நிர்வாக நிறுவன தலைவர் தனபால், வழக்கறிஞர் கருணாநிதி, பேராசிரியர் அமுதா ஆகியோர் உரையாற்றினர். சட்டசேவை மைய வழக்கறிஞர் உறுப்பினர் ஷாகிதா பர்வீன், சட்டப்பணிகள் ஆணைய சட்ட அதிகாரி தன்ராஜ் மற்றும் கல்லூரி மாணவிகள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரியின் சட்டசேவை மைய மாணவி உறுப்பினர் ஹேமாவதி நன்றி கூறினார்.

Tags : law center ,
× RELATED மரக்காணம் அருகே காணிமேடு தரைப்பாலம்...