×

வில்லியனூரில் நூறு ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது

வில்லியனூர், அக். 31:     புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கடந்த 16ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்த கனமழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வில்லியனூர் அருகே உள்ள கரிக்கலாம்பாக்கம், அரங்கனூர், சேலியமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் உள்ளன. தற்ேபாது பெய்து வரும் கனமழையில் தண்ணீர் செல்வதற்கு வடிகால் வசதி இருந்தும், தூர்வாரப்படாததால் தண்ணீர் செல்ல முடியாமல் விளைநிலங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. விவசாயிகளின் சொந்த செலவில் வாய்க்காலில் சிறிது தூரம் கோரைபுற்களை அகற்றி தூர்வாரியுள்ளனர். இதனால் சில விவசாயிகளின் நெற்பயிர்கள் மட்டும் பாதிப்பிலிருந்து தப்பியுள்ளது. இருப்பினும் பல ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகி வருகிறது.

இதுகுறித்து கரிக்கலாம்பாக்கம் விவசாயி கிருஷ்ணசாமி கூறுகையில், தற்போது சம்பா பருவத்தையொட்டி பத்து நாட்களுக்கு முன்பு நெற்பயிர்கள் நடவு செய்தோம். கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் பயிர்கள் கடும் சேதமடைந்துள்ளது. இதற்கு சரியான வடிகால் வசதி இல்லாததுதான் காரணம். இதனால் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து கடல்போல் காட்சியளிக்கிறது. தற்போது 100 ஏக்கருக்கும் மேல் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. ஒரு ஏக்கர் பயிர் செய்வதற்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு ஆகிறது. ஆனால் ஆண்டுதோறும் சம்பா பருவத்தின்போது மட்டும் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

இதுசம்பந்தமாக அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆண்டுதோறும் நெற்பயிர்கள் மூழ்கிய பின்னர் அமைச்சரும், அதிகாரிகளும் வந்து பார்வையிடுவது என்பது பயனற்றது. தற்போது பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும். மழைநீர் செல்வதற்கு வடிகால் வாய்க்காலை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, அருகில் இருக்கும் ஆறு வரைக்கும் வாய்க்கால்களை சீரமைக்க  வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் அனைவரும் நிலங்களை ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் விற்றுவிட்டு செல்லும் நிலை ஏற்படும். ஏற்கனவே பல விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்றுவிட்டனர் என்றார்.

Tags : Villianur ,
× RELATED வில்லியனூரில் மதுக்கடை மீது வெடிகுண்டு வீச்சு: 3 பேரை பிடித்து விசாரணை