×

ஆழ்துளை கிணறுகள் குறித்து கொம்யூன் ஆணையர் ஆய்வு

திருக்கனூர், அக். 31:   திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டு பட்டியில் சுஜித் வில்சன் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி புதுச்சேரியிலும் மூடப்படாமல் பல ஆழ்துளை கிணறுகள் உள்ளது. இது சம்பந்தமாக புதுச்சேரி ஆட்சியர் அருண் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு பட்டியல்  கோரியுள்ளார். மேலும் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கமலக்கண்ணன்  ஆகியோர்  பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மூடப்படாமல் உள்ள கிணறுகள் கண்டுபிடித்து மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் மூடப்படாத ஆழ்துளை கிணறு குறித்து கணக்கெடுக்கும்படி அதிகாரிகளுக்கு ஆணையர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் குடிநீர் விநியோகம் செய்யும் பணியினை செய்து வரும் டேங்க் ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள், கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் தங்களது பகுதியில் தற்போது பயன்பாட்டில் உள்ள  பயன்பாட்டில் இல்லாத மற்றும் உபயோகமற்ற ஆழ்துளை கிணறுகள் பற்றிய முழு விவரம், ஆழ்துளை கிணறு அமைவிடம், அதன் ஆழம், அமைக்கப்பட்ட ஆண்டு, தற்போதைய நிலை, பயன்பாட்டு நிலை உள்ளிட்ட விவரங்கள் அந்தந்த பகுதி இளநிலை பொறியாளர்கள் மற்றும் ஆணையரிடம் இன்று (31ம் தேதி) சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஆணையர் ஜெயக்குமார் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் எங்கெங்கு இருக்கிறது என்பதை கண்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தார். பின்னர், அந்த ஆழ்துளை கிணறுகளை உடனே மூடும்படி உத்தரவிட்டார்.

Tags : Commune Commissioner ,wells ,
× RELATED பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஸ்வியாடெக் சாம்பியன்