×

தலைமை செயலகத்தை அமைப்புசாரா தொழிலாளர்கள் முற்றுகையால் பரபரப்பு

புதுச்சேரி, அக். 31:  பண்டிகை கால உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுவையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களுக்கு வருடந்தோறும் தீபாவளிக்கு பரிசுக் கூப்பன் வழங்கப்பட்டு வந்தது. கடந்தாண்டு இது நிறுத்தப்பட்டு அவரவரின் வங்கிக் கணக்கில் ரூ.500 செலுத்தப்பட்டது. இதேபோல் இந்தாண்டும் தீபாவளிக்கு உதவித்தொகை வழங்க அரசால் கோப்பு தயாரித்து தலைமை செயலகத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில் தலைமை செயலர் ஒப்புதல் அளிக்காததால் இதுவரை தீபாவளி உதவித்தொகை அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதை கண்டித்து ஏற்கனவே தீபாவளிக்கு முந்தைய நாளில் தலைமை தபால் நிலையம் முன்பு அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்றி நிதி ஒதுக்கீட்டை பெற தர வேண்டும். பண்டிகை கால உதவித்தொகை ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் அந்த தொகையை மூவாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட வேண்டும். உயிர் இழந்த உறுப்பினர்களின் காப்பீட்டுத்தொகை மற்றும் ஈமச்சடங்கு நிதி உதவி, மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய கல்வி உதவித்தொகை, மகபேறு கால உதவித்தொகை உள்ளிட்ட நிலுவையில் உள்ள அனைத்து உதவி திட்டங்களையும் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் 100க்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் நேற்று காலை தலைமை செயலரை சந்தித்து முறையிட தலைமை செயலகம் சென்றனர்.

அங்கு தலைமை செயலர் இல்லாததால் தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை கண்டித்து அவர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர், முக்கிய நிர்வாகிகள் மட்டும் சார்பு செயலர் கண்ணனை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, சிஐடியு பிரதேச தலைவர் முருகன், செயலாளர் சீனுவாசன், பொருளாளர் பிரபுராஜ், நிர்வாகிகள் மதிவாணன், ரவிக்குமார், மணிபாலன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அப்போது பண்டிகை கால உதவித்தொகை வழங்க உடனே நடவடிக்கை எடுப்பதாகவும், மற்ற கோரிக்கைகளை தொடர்பாக தலைமை செயலரை சந்தித்து பேச வரும் 4ம் தேதி ஏற்பாடு செய்வதாகவும் சார்பு செயலர் உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Siege ,headquarters ,
× RELATED டெல்லியில் விவசாயிகள் தாக்கப்பட்ட...