×

வேகமாக நிரம்பும் ஏரி, குளங்கள்

புதுச்சேரி, அக். 31: புதுவையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும், பஞ்சரான சாலைகளால் வாகனஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.  வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றதழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுவையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. புதுவையில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனிடையே கனமழை காரணமாக புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனகசெட்டிகுளம் முதல் புதுக்குப்பம் வரையிலான 18 கிராமங்களில் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. மேலும் வழக்கத்தைவிட கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் மற்றும் மீனவ கிராமங்களில் கடற்கரையோரம் விசைப்படகுகள், பைபர் படகுகள் வரிசையாக நிறுத்த வைக்கப்பட்டிருந்தன.

இதனிடையே புதுவையில் 29ம் தேதி மாலை 5.30 மணி முதல் நேற்று மாலை 5.30 மணி வரை 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தொடர்ந்து மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முக்கிய நீர்நிலைகளான ஊசுட்டேரி, பாகூர், கனகன், கிருமாம்பாக்கம், கோர்க்காடு உள்ளிட்ட ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. நீர்வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளதால், ஏரிகளுக்கு நீர் தங்கு தடையின்றி செல்வதை காணமுடிந்தது. புதுச்சேரியில் பகுதி வாரியாக பார்க்கும் போது மிக அதிகபட்சமாக கிருமாம்பாக்கம் பகுதியில் 11 மிமீ மழை பெய்துள்ளது. கனமழை காரணமாக கட்டுமான தொழில்கள், சாலையோர வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழையை எதிர்கொள்ள வருவாய்த்துறை, தீயணைப்பு, மின்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, கவால்துறை, கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன. அதேபோல் 2 நாள் மழைக்கே சாலைகள் பஞ்சரானதால் வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர். புதிய பஸ் நிலையம் எதிரிலுள்ள மறைமலையடிகள் சாலை, காமராஜர் சாலை, 45 அடி ரோடு, 100 அடி ரோடு, அம்பேத்கர் சாலை, கடலூர் ரோடு மட்டுமின்றி கிராமப்புறங்களில் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட புதிய தார் சாலைகள் பஞ்சராகி ஜல்லி கற்கள் வழிநெடுகிலும் சிதறிக் கிடப்பதால் மழை நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக பெண்கள் பைக்குகளை ஓட்டிச் செல்லும்போது வழுக்கி விழுவதை காண முடிகிறது. மேலும் ரோட்டில் உருவாகியிருக்கும் திடீர் பள்ளத்தால் விபத்துகள் தொடர்கதையாகியுள்ளது. ஆபத்தை உணர்த்தும் வகையில் சமூக ஆர்வலர்கள் டூவிலர் டயர்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்து எச்சரித்துள்ளனர். இருப்பினும் அரசு அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் அவற்றை மூடுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை காலங்களில் சாலையில் உள்ள பெரிய பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பல லட்சம் டெண்டர் விடப்பட்டு சாலை பணிகள் நடைபெறும் நிலையில், அவை தரமற்ற நிலையில் இருப்பது இதற்கெல்லாம் காரணம் என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags : lake ,
× RELATED ஏரி, குளங்களில் களிமண் எடுக்க...