×

வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுவது குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

விழுப்புரம்,  அக். 31:    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுவது குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் 2016ம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தல்  நடத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு  விசாரணையின் போது தமிழக அரசும், மாநில தேர்தல் கமிஷனும் தொடர்ந்து அவகாசம்  கோரி வந்தன. அதே சமயம், ஊராட்சி அலுவலர்களின் கால அவகாசத்தை மட்டும்  தொடர்ந்து நீட்டித்து வந்தது. இதனால், திமுக உட்பட சிலர் உள்ளாட்சி தேர்தலை  உடனடியாக நடத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த  வழக்கை விசாரித்த ஐகோர்ட், தமிழகத்தில் விரைந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த  வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, மாநில தேர்தல்  ஆணையம், உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் பணிகளைத் தொடங்கியது. மேலும்,  நவம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவித்தது. அதன்படி இதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. மாநகராட்சி, நகராட்சி,  பேரூராட்சிப்பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமும்,  ஊராட்சிப்பகுதிகளில் வாக்குச்சீட்டு முறையிலும் தேர்தல் நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக கர்நாடகா மாநிலத்திலிருந்து, விழுப்புரம்  மாவட்டத்திற்கு 3,250 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 4ம் தேதி தமிழகம் முழுவதும் அந்தந்த  மாவட்டங்களில் புகைப்படத்துடன்கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன.  விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு மாவட்ட சேர்மன், துணை சேர்மன், 22 ஊராட்சி  சேர்மன், துணை சேர்மன்கள், 15 பேரூராட்சி சேர்மன், துணை சேர்மன், 1099  ஊராட்சிமன்றத்தலைவர்கள், துணைத்தலைவர்கள் உள்ளிட்ட 10,223 பதவிகளுக்கு  உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக 5,250 வாக்குச்சாவடிகள்  அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள  உள்ளாட்சித்தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்களை கையாளுவது தொடர்பான பயிற்சி நேற்று ஆட்சியர் அலுவலகத்தில்  நடந்தது. ஆட்சியர் சுப்ரமணியன் தலைமை தாங்கி அனைத்து நகர்புற தேர்தல்  நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி  வகுப்புகளை துவக்கிவைத்து பேசினார். இவர்களுக்கு பயிற்றுநர் பயிற்சி பெற்ற  முதன்மை பயிற்றுநர்கள் மூலம் உரிய விரிவான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது தொடர்பான செயல்முறை  பயிற்சிகள், இதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்களைக் கொண்டு வழங்கப்பட்டது.

தற்போது பயிற்சி பெற்ற தேர்தல்  நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம்  வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு உரிய பயிற்சி அளித்திட ஏதுவாக, மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரங்கள் பேரூராட்சி, நகராட்சிகளுக்கு வழங்கப்பட்டது.  ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) கண்ணன், வளர்ச்சிப்பிரிவு நேர்முக  உதவியாளர் மஞ்சுளா, தேர்தல்பிரிவு வட்டாரவளர்ச்சி அலுவலர் முருகன்,  பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Election Officers ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...