×

தொடர் உயிர் பலி எதிரொலி வெள்ளாறு அணைக்கட்டு பாலத்தின் பக்கவாட்டு சுவரை உயர்த்த வேண்டும்

சேத்தியாத்தோப்பு, அக். 31: சேத்தியாத்தோப்பு வெள்ளாறு அணைக்கட்டு பாலத்தின் பக்கவாட்டு சுவரை உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  சேத்தியாத்தோப்பு பொதுப்பணித்துறை அலுவலகத்தின் அருகே வெள்ளாறு அணைக்கட்டு பாலம் உள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. தற்போது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. வறட்சி காலங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த அணைக்கட்டில் ஷட்டர்களை அடைத்து நீர் தேக்கி வைக்கப்பட்டது. மேலும் மழைக்காலங்களில் காட்டாற்று வெள்ளம், மணிமுக்தாற்றிலிருந்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் வடிகாலாக செல்லும். 25 ஆண்டுகளுக்கு முன் இப்பாலத்தின் வழியே சென்னை - கும்பகோணம் செல்லும் பேருந்துகளும், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், முஷ்ணம் செல்லும் பேருந்துகளும், சென்று வந்தன.

பின்னர் வாகன நெரிசல், குறுகலான பாலம், பொதுமக்கள் அதிகளவில் நடமாட்டம் ஆகியவற்றால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால் இந்த வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள், மிதிவண்டிகள் சென்று வருகின்றன. மேலும் அள்ளூர், பூதங்குடி கிராமத்தினர் குறித்த நேரத்தில் நகர பகுதியை சென்றடைய நடைபாதையாக இப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தினந்தோறும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்பாலத்தை கடந்து தான் சென்று வருகின்றனர். இந்நிலையில் இப்பாலம் தற்போது பொதுமக்கள் சென்று வர பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பாலத்தின் பக்கவாட்டு சுவர் உயரம் தாழ்வாக உள்ளதால் கடந்த ஆண்டு ஒரு மூதாட்டி தவறி விழுந்து பலியானார். சில தினங்களுக்கு முன் சென்னி நத்தம் கிராமத்தை சேர்ந்த செல்வம் மகன் பசுபதி (24) இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது நிலை தடுமாறி பாலத்திலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கு முக்கிய காரணம் பாலத்தில் பக்கவாட்டு சுவர் தாழ்வாக இருப்பதுதான். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேலும் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க பாலத்தின் பக்கவாட்டு சுவரை உயர்த்த வேண்டும். அல்லது பாலத்தின் இரு புறத்திலும் இரும்பு தண்டவாளங்களை பதித்து தடுப்பு வேலி அமைத்துதர வேண்டும் என்றும், மின் விளக்குகள் அமைத்திட வேண்டும் என்று பொதுமக்களும், சமூகஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,
× RELATED பாம்பன் சாலை பாலத்தில் இணைப்பு ஸ்பிரிங் பிளேட்கள் சேதம்