×

வேலூர் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் 6வது நாளாக நீடிப்பு

வேலூர், அக்.31: வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் 6வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்கக்கூடிய அரசாணை 354 திருத்தம் செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் மருத்துவ சேவையாற்றும் மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ படிப்பிலும், சிறப்பு மருத்துவமனையிலும் பணியாற்றவும், படிக்கவும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட 4 கோரிக்கைகளை முன்வைத்து அரசு டாக்டர்கள் கடந்த 25ம் தேதி முதல் போராடி வருகிறார்கள்.

வேலூர் மாவட்டத்தில் 6வது நாளாக அரசு டாக்டர்கள் நேற்றும் பெரும்பாலானோர் பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புறநோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் வருகைப்பதிவில் டாக்டர்கள் தங்களின் வருகையை பதிவு செய்யாமல், காய்ச்சல், அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவுகளில் மட்டும் குறைந்த அளவில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசு நேற்று முன்தினம் இரவு குறைந்த எண்ணிக்கை உறுப்பினர்களை கொண்ட டாக்டர் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, வாபஸ் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம் என்று டாக்டர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags : Government doctors ,Vellore District ,
× RELATED வேலூர் மாவட்டத்தில் மேலும் 171 பேருக்கு கொரோனா உறுதி