×

ஒடுகத்தூர் அடுத்த அகரம் கிராமத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மாணவன் பலி

* உறவினர்கள் சாலைமறியலால் பரபரப்பு * சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைக்கு சீல்

அணைக்கட்டு, அக்.31: ஒடுகத்தூர் அடுத்த அகரம் கிராமத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மாணவன் பலியானான். சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து முறையான சிகிச்சை அளிக்காத தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா அகரம் கிராமம் புதுமனை பகுதியை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி அனிதா. இவர்களது 2வது மகன் ஹரீஷ்(7) அங்குள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், கடந்த 25ம் தேதி மாணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது, இதையடுத்து அவரது பெற்றோர் அவனை மாதனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவனின் உடல் நிலை மோசமடைந்தது. இதனால் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நேற்று முன்தினம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஹரீஷ் அனுப்பி வைக்கப்பட்டான்.

அங்கு மாணவனின் ரத்தத்தை பரிசோதித்த டாக்டர்கள் டெங்கு காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவன் ஹரீஷ் நேற்று காலை இறந்தான். இதனால், ஆவேசமடைந்த சிறுவனின் உறவினர்கள் ஹரிஷ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி நேற்று மாலை அகரம் கூட்ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஆம்பூர் தாசில்தார் ரமேஷ், பிடிஓ விநாயகம், வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் மற்றும் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஹரீஷின் உறவினர்கள், மாணவன் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, நிவாரண நிதி வழங்க வேண்டும் என அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். அதற்கு டெங்கு கொசு ஒழிப்புப்பணியை அகரம் புதுமனை பகுதியில் சரியாக மேற்கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படும் என்றும் உறுதியளித்தனர்.
இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் 15 நிமிடங்கள் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடைய நேற்று காலை மாதனூர் வட்டார மருத்துவ அலுவலர் ராமு தலைமையில் உயிரிழந்த சிறுவனின் வீட்டில் வேறு யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை செய்து, வீட்டை சுற்றிலும் கொசு ஒழிப்பு பணியில் சுகாதாரப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வந்த மாணவன் ஹரீஷூக்கு முறையான சிகிச்சை வழங்கப்படாததும், அவனை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்காமல் சாதாரண காய்ச்சலுக்கான சிகிச்சை வழங்கப்பட்டதுமே அவனது உயிரிழப்புக்கு காரணம் என்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அறிக்கையில் தெரிய வந்தது. இதை தொடர்ந்து மாணவன் ஹரீஷூக்கு முறையான சிகிச்சை வழங்காத மாதனூர் தனியார் மருத்துவமனைக்கு மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின் நேற்று சீல் வைத்தார். இதற்கிடையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இறந்த ஹரீஷின் உடலுக்கு ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Tags : student ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...