×

வேலூர் மாவட்டத்தில் பள்ளி, அங்கன்வாடி மையங்கள் அருகே பயனற்ற ஆழ்துளை கிணறுகள் எத்தனை?

வேலூர், அக்.31: வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, அங்கன்வாடி மையங்கள் அருகே பயனற்ற ஆழ்துளை கிணறுகள் எத்தனை என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டி பகுதியில் பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித் 5 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான். இதையடுத்து தமிழகம் முழுவதும் பயன்பாடற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் அனைத்தையும் உடனடியாக மூட வேண்டும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டனர்.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாவட்டத்தில் பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களின் அருகே மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கான நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர் மற்றும் அங்கன்வாடி பொறுப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் 3,362 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் 2,999 அங்கன்வாடி மையங்களின் அருகே உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி கிணறுகளின் விவரங்களை தலைமை ஆசிரியர், அங்கன்வாடி பணியாளர்கள் ஆய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டும்.

இதுகுறித்து அப்பகுதி விஏஓ, பிடிஓ, நகராட்சி, மாநகராட்சி ஆணையர்களிடம் உடனடியாக தெரியபடுத்தி அவற்றை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் 3,362 பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்த அறிக்கையை இன்று(நேற்று) மாலைக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்’ என்று கூறினார்.

Tags : school ,wells ,Anganwadi ,Vellore district ,centers ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி