×

வேலூர் மாவட்டத்தில் 7 பேர் பலி 1067 பேர் டெங்கு காய்ச்சலுடன் அனுமதி நாளுக்கு நாள் அதிகரிக்கும் எண்ணிக்கையால் அதிகாரிகள் திணறல்

வேலூர், அக்.31: வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 7 பேர் பலியாகி உள்ள நிலையில் இதுவரை 1067 பேர் டெங்கு காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அதிகாரிகள் திணறி வருகின்றனர். தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளுர், வேலூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்து உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 7 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். டெங்குவை கட்டுப்படுத்தும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

இதனால் தினந்தோறும் காய்ச்சலால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்வது அறியாமல் திணறி வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மாவட்டம் டெங்கு பாதிப்பு அதிகளவில் உள்ளது. கடந்த வாரம் 950 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த வாரம் இதுவரை 1067 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டிய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இருப்பினும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். தங்களது சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும், தொழிற்சாலைகளும் தினந்தோறும் தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும். டெங்கு கொசு புழு உருவாக்காத வகையில் தடுப்பு நடவடிக்கையில் நடவடிக்கை எடுக்ககப்பட்டு வருகிறது.மழைக்காலம் தொடங்கி உள்ளதால் மேலும் வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியவர்கள், நோயாளிகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : deaths ,Vellore ,
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...