×

வாகன தணிக்கையின்போது பெறப்பட்ட எண்களை பயன்படுத்தி பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய போக்குவரத்து எஸ்ஐ சஸ்பெண்ட்

வேலூர், அக்.31: வேலூரில் வாகன தணிக்கையின் பெறப்பட்ட எண்களை பயன்படுத்தி பெண்களின் செல்போனில் இரவு நேரங்களில் ஆபாச தகவல்களை அனுப்பிய விவகாரத்தில் தொடர்புடைய போக்குவரத்து எஸ்ஐயை சஸ்பெண்ட் செய்து எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.வேலூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் ராஜமாணிக்கம். இவர் நகர பகுதியில் வாகன தணிக்கையின்போது ஆவணங்கள் இல்லை என்று கூறி பெண் வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்துள்ளார். அப்போது, அவர்களின் செல்போன் எண்களையும் ரசீதில் பதிவு செய்துள்ளார். அந்த செல்போன் எண்களை பயன்படுத்தி சில பெண்களுக்கு இரவு நேரங்களில் ஆபாச வீடியோ அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர்களது உறவினர்கள் சிலர், கடந்த 25ம் தேதி எஸ்ஐ ராஜமாணிக்கத்திடம் தட்டிக்கேட்டனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதில், எஸ்ஐ ராஜமாணிக்கம் மன்னிப்பது கேட்பது போன்ற சம்பவம் இடம் பெற்று இருந்தது. இதையடுத்து, எஸ்ஐ ராஜாமாணிக்கத்தை வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.

மேலும் எஸ்பி உத்தரவின்பேரில் வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில், எஸ்ஐ ராஜமாணிக்கம் பெண்களுக்கு ஆபாச தகவல் அனுப்பியது உறுதியானது என்று எஸ்பிக்கு அறிக்கை அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரும் புகார் அளித்தார். இதையடுத்து போக்குவரத்து எஸ்ஐ ராஜமாணிக்கத்தை சஸ்பெண்ட் செய்து எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.

Tags : Traffic SI ,women ,vehicle audits ,
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது