×

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை கலசபாக்கத்தில் அதிகபட்சமாக 149 மி.மீ. மழை பதிவு

திருவண்ணாமலை, அக்.31: திருவண்ணாமலை மாவட்டத்தில், தொடர்ந்து பெய்யும் கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அதிகபட்சமாக, கலசபாக்கத்தில் 149 மி.மீ. மழை பதிவானது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவு ெதாடங்கிய மழை, விடிய விடிய பெய்தது. அதைத்தொடர்ந்து, பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. மாலை 5 மணிக்கு பிறகு கனமழையாக வலுத்தது. அதனால், நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிபட்டனர்.

மேலும், மாவட்டம் முழுவதும் பரவலான மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 149 மி.மீ. மழை பதிவானது. ஆரணியில் 39.40 மிமீ, செய்யாறு 48 மி.மீ, செங்கம் 48.50 மி.மீ, சாத்தனூர் அணை 36.20 மி.மீ, வந்தவாசி 53.30 மி.மீ, போளூர் 61.40 மி.மீ, திருவண்ணாமலை 41 மி.மீ, தண்டராம்பட்டு 44.40 மி.மீ, சேத்துப்பட்டு 58 மி.மீ, கீழ்பென்னாத்தூர் 67.40 மி.மீ, வெம்பாக்கம் 41 மி.மீ மழை பதிவானது. மேலும், சாத்தனூர் அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 119 அடியில் தற்போது 87.80 அடியாகவும், கொள்ளளவு மொத்தமுள்ள 7,321 மில்லியன் கன அடியில், தற்போது 2,218 மி.க. அடியாகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 752 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 29.52 அடியாகவும், மிருகண்டா அணையின் நீர்மட்டம் 9.51 அடியாகவும், செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 47.63 அடியாகவும் உள்ளது. செண்பகத்தோப்பு அணையின் மதகுகள் பழுதாகியிருப்பதால், தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்துக்கு அதிகமாக தண்ணீர் நிரப்ப முடியாத நிலை உள்ளது. எனவே, அணைக்கு தற்போது வினாடிக்கு 155 கன அடி தண்ணீர் வருகிறது. அதனை, அணையின் வெளியேற்று கால்வாய் வழியாக திறந்துவிட்டுள்ளனர்.

Tags : Thiruvannamalai district ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...