×

திருவாரூர் மாவட்டத்தில் பயன்பாடின்றி கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை உடனே மூட வேண்டும்

திருவாரூர், அக்.31: திருவாரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்துவரும் ஆழ்துளை கிணறுகளை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக மூட வேண்டும் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்கள், விவசாய நிலங்கள், நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வரும் ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் தனியாருக்கு சொந்தமான ஆழ்குழாய்க் கிணறுகள் போன்றவற்றை உடனே மூடுவதற்கு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பொதுமக்களும் தாங்களாக முன்வந்து தங்களுக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணறுகளை மூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் அமைப்பவர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகளை புனரமைப்பு பணி செய்பவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் விண்ணப்பித்து உரிய அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இதற்கான பணி நடைபெறும்போது உள்ளாட்சி அமைப்புகளால் அளிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்காத உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதைத்தவிர மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறு தோண்டுவதற்கான ரிக் இயந்திரம் வைத்திருப்பவர்கள் கலெக்டரிடம் உடனே பதிவு சான்று பெற வேண்டும். எனவே மாவட்டத்தில் சட்ட விதிமுறைகளை கடைபிடிக்காத நில உரிமையாளர்கள் மற்றும் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : wells ,Thiruvarur district ,
× RELATED தங்க நகை முதல் காய்கறி வரை எடை குறைவாக...