வலங்கைமான் அடுத்த விருப்பாட்சிபுரத்தில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

வலங்கைமான், அக்.30: வலங்கைமான் அடுத்த விருப்பாட்சிபுரம் பகுதியில் பாபநாசம் சாலையில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேதாரன்யம் மற்றும் வழியோர கிராமங்கள் பயன் பெறும் விதமாக வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. முன்னதாக இத்திட்டத்தில் வேதாரண்யம் பகுதிக்கு கும்பகோணம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து பாபநாசம்- வலங்கைமான் மற்றும் வலங்கைமான் - மன்னார்குடி சாலைவழியாக சாலையின் மையப்பரப்பில் இயந்திரத்தின் உதவியோடு பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பொருத்தி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. சாலையில் செல்லும் கனரக வாகனங்களால் இக்குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதும் அதை சரிசெய்வதும் தொடர் கதையாக உள்ளது.

இந்நிலையில் பாபநாசம்- குடவாசல் சாலையில் விருப்பாட்சிபுரம் கடைத்தெரு பகுதியில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கால்வாய்போல் ஓடுகிறது. மேலும் சாலையும் பழுதாகியுள்ளதால் அப்பகுதியின் வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். ஆலங்குடி குருக்கோயிலில் குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு ஆயிரகணக்கான வாகனங்கள் இந்த சாலையை தற்போது அதிக அளவில் பயன்படுத்தி வருவதாலும் சாலையில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : collapse ,Valangaiman ,
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே சாலை பணி பள்ளத்தில் கவிழ்ந்து வாலிபர் பலி