×

திடீர் முற்றுகையால் பரபரப்பு மழைநீர் தேங்கியிருப்பது தெரியாமல் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள குழிகளால் தொடர் விபத்து

திருத்துறைப்பூண்டி, அக்.31: நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள குழிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், குழிகள் இருப்பது தெரியாமல் தொடர் விபத்து ஏற்படுகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் முதல் வேதாரண்யம் சாலை வரை ஒரே சாலைதான். இந்த சாலையிலிருந்துதான் மன்னார்குடி, நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை நெடுஞ்சாலைகள் பிரிகின்றன. நகராட்சி தெரு சாலைகளும் பிரிகின்றது. இந்தநிலையில் திருத்துறைப்பூண்டியிலிருந்து செல்லும் மன்னார்குடி, திருவாரூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை , வேதாரண்யம் சாலைகளில் பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். தற்போது மழைகாலம் என்பதால் சாலைகளில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது இதனால் சாலைகளில் உள்ள பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் தினந்தோறும் விழுந்து காயம் ஏற்பட்டு வருகிறது. கனரக வாகன ஓட்டிகளும் பள்ளம் இருப்பது தெரியாமல் வேகமாக வரும்போது குழிகளில் விழுந்து எழும்பும்போது நிலை தடுமாறி வண்டியை சாலையோர குழிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

மேலும் சில இலகுரக வாகனங்கள் வேகமாக வரும்போது பள்ளத்தில் வாகனத்தில் ஏறி இறங்குவதால் மழைநீர் சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்களை சகதி கலந்த நீரில் குளிப்பாட்டுகிறது. இதனால் பணி நிமித்தமாக செல்லும் பணியாளர்களும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் பல்வேறு இடைஞ்சல்களுக்கு ஆளாகின்றனர். சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து புகார் தெரிவித்தால் நெடுஞ்சாலை துறையினர் அவ்வப்போது வந்து கண்துடைப்புக்கு செய்வது போல் பள்ளங்களில் செங்கல்லை கொட்டி சீரமைக்கின்றனர். அதுசில மணி நேரங்களிலேயே வாகனங்கள் செல்லும்போது தூள் தூளாகி மீண்டும் பள்ளம் ஏற்பட்டு விடுகிறது. குறிப்பாக திருத்துறைப்பூண்டி நாகை சாலை அண்ணா சிலை அருகில் உள்ள பெரும்பள்ளத்தில் தான் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே குண்டும் குழியுமாக உள்ள இடங்களில் கருங்கல் ஜல்லியிட்டு, தார் போட்டு சீரமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : crashes ,highway ,blockade ,
× RELATED ஐபிஎல் தொடர் பிளேஆப் தேதிகள் அறிவிப்பு