×

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் நிதி வங்கி கணக்கில் பணம் எடுத்து மோசடியா?

திருவாரூர், அக்.31: திருவாரூர் அருகே குளிக்கரையில் இயங்கி வரும் தேசிய வங்கி கிளை ஒன்றில் பொதுமக்களின் பணம் குளறுபடி நடைபெறுவதாகக் கூறி அந்த வங்கியை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர். திருவாரூர் அருகே குளிக்கையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்று இயங்கி வருகிறது. இந்த வங்கியினை குளிக்கரை, பெருந்தரக்குடி , ஒட்டகுடி, தேவர்கண்டநல்லூர் உட்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் வாடிக்கையாளராக இருந்து வருகின்றனர். மேலும் பெருந்தரக்குடி மற்றும் தேவர்கண்டநல்லூர் ஊராட்சிகள் உட்பட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெறும் 100 நாள் வேலைத்திட்டத்திற்காக ஊழியர்களுக்கு உரிய சம்பளத் தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் போன்ற திட்டங்களில் பயனாளிகள் இந்த வங்கியில் இருந்து பணம் பெற்று வருகின்றனர். இதுமட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளின் வீடு வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கும் பயனாளிகளுக்கு இந்த வங்கி மூலம் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வங்கியில் பெற்ற குழு கடன்களுக்கு ஒருசிலர் அந்த தொகையை கட்டாத பட்சத்தில் மீதமுள்ளவரிடமிருந்து இந்த தொகை வசூல் செய்யும் பணியில் மேற்படி வங்கி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு வசூல் செய்யப்படும் தொகையானது இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திலிருந்தும், முதியோர் ஓய்வூதியத்திலிருந்தும், வீடு கட்டும் திட்டத்திலிருந்தும் பயனாளிகளின் ஒப்புதல் இல்லாமலே வங்கி நிர்வாகம் கடன் தொகையினை பிடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் மின்னணு பணப்பரிமாற்றம் மூலம் பல்வேறு குளறுபடிகளும், மோசடிகளும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுபோன்ற வாடிக்கையாளர்களின் ஒப்புதல் இல்லாமலேயே அவர்களது தொகையில் பிடித்தம் செய்து கொள்வது ,மின்னணு பணபரிமாற்ற குளறுபடி போன்றவை குறித்து வாடிக்கையாளர்கள் நேற்று வங்கி மேலாளரை அணுகியபோது, அதற்கு உரிய பதில் கிடைக்காததால் மேற்படி வங்கியை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் கூறுகையில், டெல்டா மாவட்டங்களில் போதுமான வேலை வாய்ப்பு இல்லாமல் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் ,கட்டிட தொழிலாளர்களும் மற்றும் இதர தொழிலாளர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் குழு கடன்களாக பெற்ற தொகையில் ஒருசிலர் யாரேனும் பாக்கி வைத்திருக்கும் நிலையில் அந்த தொகைக்காக பிறரது கணக்கிலிருந்து வாடிக்கையாளர்களின் ஒப்புதல் இல்லாமலேயே மேற்படி வங்கியானது தனது வங்கிக் கடனுக்காக குறிப்பிட்ட தொகையை வரவழைத்துக் கொள்ளும் நிலை இருந்து வருகிறது. இதுமட்டுமின்றி மின்னணு பணப்பரிமாற்றம் மூலம் பல்வேறு மோசடிகளும் நடைபெற்று வருகின்றன. அதாவது ஒரு வாடிக்கையாளரின் இருப்பில் ரூ.3 ஆயிரம் இருக்கும் பட்சத்தில் அவர் ஆயிரம் ரூபாய் எடுக்க சென்றால் அவரிடம் கூடுதலாக ஒரு கைரேகை பெற்றுக் கொண்டு அவரது வங்கிக் கணக்கில் இருந்து கூடுதலாக ரூ.1000 காணாமல் போகும் நிலை இருந்து வருகிறது.எனவே இதுகுறித்து வங்கி மேலாளரிடம் கேட்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய தீர்வு காண வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்