×

மாவட்டம் முழுவதும் கடை வீதிகளில் களைகட்டியது தீபாவளி ‘பர்சேஸ்’ பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

விருதுநகர், அக். 27 : இன்று தீபாவளி கொண்டாடப்படுவதையொட்டி, நேற்று இரவு முழுவதும் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.                                                           தீபாவளி பண்டிகையை கொண்டாட கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் தயாராகி வந்தனர். ஜவுளி கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. அடித்தட்டு மக்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்திற்கு தீபாவளிப் பண்டிகை முன்பணம், போனஸ் மற்றும் வாரச் சம்பளம் அனைத்தும் வெள்ளி, சனிக்கிழமைகளில் வழங்கப்பட்டதால் நேற்று கடை வீதிகளிலும், பிளாட்பார ஜவுளி கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தது. விடிந்தால் தீபாவளி என்பதால், நேற்று அதிகாலை முதல் இன்று காலை வரை விடிய, விடிய கடைவிதிகளில் மக்கள் வெள்ளம் போல் குவிந்திருந்தனர். கடைவீதிகளில் ரெடிமேட் ஆடைகள், பலசரக்கு, பேன்சி கடைகள், இனிப்பு கடைகள், பூக்கடைகள், பழ கடைகள், பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. விருதுநகர் தேசபந்து மைதானம் மற்றும் மதுரை சாலை ஓரங்களில் திருப்பூர், ஈரோடு ஜவுளி கடைகள் அதிக அளவில் போடப்பட்டு இருந்தன. பிளாட்பாரக் கடைகள், பூக்கடைகள், ஸ்வீட் கடைகள், ரெடிமேட் கடைகள், பழங்கள், பேன்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.
                                        
மக்கள் அதிக அளவில் குவிந்ததை தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், மாவட்டத்தில் அனைத்து நகரங்களில் பஸ் நிலையங்கள், கடை வீதிகள், ஏடிஎம் மையங்கள், நகை கடைகள், கோவில் பகுதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் குற்றச்சம்பவங்கள், பணம், நகை பறிப்பு சம்வங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் விடிய,விடிய ரோந்து சுற்றி வந்தனர்.

இதேபோல சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் நகரங்களில் பெரும்பாலான கடைகள் இன்று அதிகாலை 2 மணி வரை திறந்திருந்தன. தீபாவளி பண்டிகைக்காக நேற்று முன்தினம் முதல் இன்று அதிகாலை வரை மாவட்டத்தின் அனைத்து நகரங்களிலும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

Tags : Shoppers ,streets ,district ,
× RELATED அதிகார நந்தி வாகனத்தில் உலா வந்த...