×

தீபாவளியையொட்டி கூடுதல் கட்டணம் செலுத்தி ஊருக்கு வந்த பயணிகள்

சிவகங்கை, அக். 27: தீபாவளியையொட்டி சென்னை, திருப்பூர், கோவை உள்ளிட்ட ஊர்களில் இருந்து சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்தவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி ஊருக்கு வந்தனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட ஊர்களில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் 90 சதவீதத்தினர் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு மட்டுமே ஊருக்கு வருகின்றனர். ஆனால், தீபாவளி பண்டிகையையொட்டி சிவகங்கை மாவட்டத்திற்கு வரும் வகையில் கூடுதல் ரயில்கள் கிடையாது. வழக்கமான நாட்களில் இயக்கப்படும் இரண்டு ரயில்கள் மட்டுமே வரும். தீபாவளிக்கு முந்தைய தின ரயில் பயணங்களுக்கு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்துள்ளது.

இதனால் இன்று தீபாவளி பண்டிகைக்கு அனைவரும் ஊருக்கு வருவதற்கு பஸ்களை நம்ப வேண்டியிருந்தது. ஆனால், லட்சக்கணக்கான பயணிகள் வரும் வகையில் சிவகங்கை போன்ற மாவட்ட பகுதிகளுக்கு கூடுதல் பஸ்களும் அரசு சார்பில் இயக்கப்படுவதில்லை. கூடுதலாக பஸ்களும், ரயில்களும் இல்லாத நிலையில் வெவ்வேறு ஊர்கள் செல்லும் பஸ்களில் ஏறி பல பஸ்களில் பயணம் செய்து ஊருக்கு வந்து சேர்கின்றனர்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்கின்றனர். கூடுதல் கட்டணம் செலுத்தியும் ஆம்னி பஸ்களில் சீட் கிடைப்பதில்லை. இதனால் அருகருகே உள்ள கிராமங்களை சேர்ந்தோர் ஒன்று சேர்ந்து தனியார் வாடகை வேன் பிடித்து வந்தனர். இவ்வாறு ஊருக்கு வருவதற்கு பயணக்கட்டணமாக மட்டும் ஒவ்வொரு நபரும் ஆயிரக்கணக்கில் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இவ்வாறு கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளதாக பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை செந்தில்குமார் கூறுகையில், `` ஆண்டிற்கு ஒரு முறை தீபாவளி பண்டிகைக்கு மட்டுமே ஊருக்கு வரவேண்டிய வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் எப்படியாவது ஊருக்கு செல்ல வேண்டும் என்ற நிலையே மனதில் உள்ளதால் போதிய போக்குவரத்து வசதி இல்லாமலும் ஊருக்கு வந்து சேர்கிறோம். ஊருக்கு வருவதற்கு பயண கட்டணமாக ரூ.2ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். இந்த பணம் இருந்தால் இன்னும் கூடுதலாக குடும்பத்திற்கு ஏதேனும் செய்யலாம். ஆனால் வேறு வழியில்லாமல் செலவு செய்து வருகிறோம். பண்டிகை காலங்களில் சிவகங்கை போன்ற ஊர்கள் வழியே கூடுதல் பஸ், ரயில்கள் இயக்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை’’ என்றார்.

Tags : Travelers ,town ,Diwali ,
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி