×

புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க தஞ்சை கடைவீதியில் குவிந்த மக்கள் கூட்டம்

தஞ்சை, அக்.27: தஞ்சை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கடைவீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. புத்தாடைகள், பட்டாசு வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. காவிரி டெல்டா மாவட்டங்கள் முற்றிலும் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டது. ஏற்கனவே விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். கடன் தொல்லை, வெள்ளம், வறட்சி மற்றும் கஜா புயல் தாக்குதல் ஆகிய இயற்கை சீற்றங்கள், விளை பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமை, தண்ணீர் பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்னைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நடப்பாண்டு தீபாவளியை எப்படி கொண்டாடுவது என தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர். இந்நிலையில் பயிர் காப்பீடு ஓரளவு விவசாயிகளின் வருத்தத்தை போக்கியுள்ளது.

2018-19ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை வந்துள்ளதிலும், அதை வழங்குவதிலும் பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும் தற்போது பெரும்பாலான விவசாயிகளுக்கு தீபாவளி செலவிற்கு காப்பீட்டு தொகை கைகொடுத்துள்ளது. இதனால் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை போன்ற நகரங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக மக்கள் கூட்டம் கூடியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். புத்தாடை வாங்கவும், பட்டாசு, இனிப்பு போன்ற தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் குவிந்து வருகின்றனர். தஞ்சை மாநகரில் காந்திஜி சாலை, கீழஅலங்கம், தெற்கலங்கம், தெற்குவீதி, தென்கீழ் அலங்கம் போன்ற பகுதிகளில் மக்கள் அலைஅலையாக சென்று பொருட்களை வாங்கிச் சென்றனர். இத்துடன் தரைக்கடை வியாபாரிகளும் இப்பகுதியில் கடைகளை அமைத்துள்ளதால் வியாபாரம் களைகட்டியுள்ளது.

புத்தாடைகள், பேன்சி பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், குழந்தைகளுக்கான புதிய டிசைன்களில் ஆன ஆடைகள், பனியன், ஜட்டிகள், லுங்கிகள் குவித்து வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். புதிய டிசைன்களில் விலையும் குறைவாக உள்ளதால் வசதிபடைத்தவர்கள் கூட தரைகடைகளில் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் காந்திஜி சாலை, அண்ணா சிலை போன்ற பகுதிகளில் மக்கள் நெருக்கடி அதிகமாக காணப்படுகிறது.

இதனால் எஸ்.பி.மகேஸ்வரன் மேற்பார்வையில் ஏராளமான போலீசார், ஆயுதப்படை காவலர்கள், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடைவீதிகளில் தொடர்ந்து ரோந்து செல்லும் காவலர்கள் சந்தேகப்படும் நபர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்பதை கண்காணிக்கின்றனர்.

மேலும் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களும் உஷாப்படுத்தப்பட்டு வருகின்றனர். திருடர்களிடமிருந்து எப்படி தற்காத்து கொள்வது என்பதும் குறித்து, தீ அல்லது கூட்ட நெரிசலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி என்பது குறித்து ஸ்பீக்கர் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகள் கூறப்பட்டது. இதன் மூலம் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி பாதுகாப்புடன் மக்கள் வந்து செல்லும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : crowds ,
× RELATED மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க...