×

முத்துப்பேட்டை எடையூரில் இடிந்து விழும் நிலையில் இருந்த ஆர்ஐ அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி துவக்கம்

முத்துப்பேட்டை, அக். 27: முத்துப்பேட்டை அருகே எடையூரில் இடிபாடுகளுடன் இடிந்து விழும் நிலையில் இருந்த ஆர்ஐ அலுவலக கட்டிடத்திற்கு பதில் தினகரன் செய்தி எதிரொலியாக புதிய கட்டிடம் கட்டும் பணி துவங்கி உள்ளது.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் ஆர்ஐ அலுவலகம் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு மெயின் ரோட்டை ஒட்டியிருந்த பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இக்கட்டிடம் பழுதானதால் இடித்து அகற்றப்பட்டது. அப்போது புதிய கட்டிடம் விரைவில் அமையுமென அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் ஆண்டுகள் பல கடந்தனவே தவிர புதிய கட்டிடம் வந்தபாடில்லை. இந்நிலையில் ஆர்ஐ அலுவலகம் தற்போது அதே பகுதியில் உள்ள பழுதடைந்த அங்காடி கட்டிடத்தின் ஒரு பகுதியில் இயங்கி வந்தது.

இந்த கட்டிடத்தின் உள்புறத்தில் சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து கொட்டி கம்பிகள் வெளியே தெரிந்து எலும்புக்கூடாக காட்சி அளித்ததுடன் சுவர்கள் விரிசல் ஏற்பட்டு இடிபாடுகளுடன் இருந்த கட்டடத்தில் ஒருமேஜை நாற்காலியை தவிர வேறெதுவுமில்லை. பல்வேறு அலுவல் மற்றும் சான்றுபெற வரும் பொதுமக்கள் உட்கார இடமின்றி நின்றவாறு ஆர்ஐயை சந்திக்க வேண்டியிருந்தது. இந்தநிலையில் எடையூர் ஆர்ஐயின் கீழ் இருபது விஏஓக்கள் பணியாற்றுகின்றனர். எடையூர் மற்றும் ஆரியலூர், கள்ளிக்குடி, குன்னலூர், வேப்பஞ்சேரி, பாண்டி, ஓவரூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் தினசரி பள்ளி மற்றும் அரசு நலதிட்ட உதவிக்கான சான்றுகள் பெற ஆர்ஐ அலுவலகம் வருகின்றனர்.இங்கு வரும் பொதுமக்கள் கட்டிடத்தின் பரிதாப நிலை குறித்து உயரதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை ஏதுமில்லை. அதனால் இங்கு வரும் பொதுமக்கள் திக்..திக்.. பயணமாக வந்து சென்றனர். அதேபோல் இந்த ஆர்ஐ அலுவலக கட்டிடம் அருகே இடிந்து விழும் அபாய நிலையில் பழுதடைந்த குடிநீர் தேக்கத்தொட்டியும் இருந்ததால் எது முன்னதாக இடிந்துவிழும் என்பது புரியாத நிலையில் இருந்தது. இந்த அபாயங்களை சுட்டிக்காட்டி கடந்த ஜூன் 16ல் தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து இங்கு பணியில் இருக்கும் ஆர்ஐக்கு பணியாற்ற இப்பகுதியில் இடம் இல்லாததால் திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து கொண்டு பணியாற்றி வந்தார். இதனால் இப்பகுதி மக்கள் சான்றிதழ் வாங்க திருத்துறைப்பூண்டிக்கு சென்று வந்தனர்.

இதனால் மக்களின் சிரமம் அதிகளவில் ஏற்பட்டது. இதுகுறித்தும் தினகரனில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பொதுமக்கள் வசதிக்கு எடையூர் கடைதெரு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு நன்றியை தெரிவித்தனர்.

Tags : building ,RI ,office ,Edayoor ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...