×

தீபாவளி போனஸ் வழங்காததால் ஸ்பின்னிங் மில் வாகனத்தை சிறை பிடித்து போராட்டம்

ஜலகண்டாபுரம், அக்.27: ஜலகண்டாபுரம் அருகே போனஸ் வழங்காத தனியார் ஸ்பின்னிங் மில்லை கண்டித்து, மில்லுக்கு சொந்தமான வாகனத்தை சிறைபிடித்து தொழிலாளர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜலகண்டாபுரம் மற்றும் சூரப்பள்ளி கிராமத்தில் இருந்து வெப்படையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் ஸ்பின்னிங் மில்லுக்கு 10க்கும் மேற்பட்டோர் வேலைக்கு சென்று வருகின்றனர். இதேபோல் காகாபாளையம், பூலாம்பட்டி, இருப்பாளி, எடப்பாடி, மல்லசமுத்திரம் ஆகியபகுதிகளில் இருந்தும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் வேலைக்கு செல்கின்றனர். இந்நிலையில், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆலை நிர்வாகத்தின் சார்பில் நேற்று காலை முதல் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட போனஸ் கடந்த வருடம் வழங்கப்பட்டதை விட பாதிக்கும் குறைவாக வழங்கியதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஆலை நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதையடுத்து, நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில், 2வது ஷிப்டிற்கு ஆட்களை ஏற்றி செல்ல வந்த மில்லிற்கு சொந்தமான வாகனத்தை, சூரப்பள்ளியை சேர்ந்த தொழிலாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் மற்ற பகுதிகளுக்கும் சென்ற வாகனங்களையும், அப்பகுதி தொழிலாளர்கள் சிறைபிடித்து வைத்துள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து ஆலை நிர்வாகத்தினர் தொழிலாளர்களிடம் செல்போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியும், உரிய தீர்வு எட்டப்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் மில் வாகனத்தை சிறை பிடித்து 2வது நாளாக நேற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags : Mill ,Diwali ,
× RELATED சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தில் ஆய்வகம், பயிற்சி மையம் திறப்பு