×

தீபாவளியையொட்டி தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்

தர்மபுரி, அக்.27: தீபாவளி பண்டிகையொட்டி, தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. கூட்டநெரிசலை தவிர்க்க சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜவுளி, இனிப்பு மற்றும் பட்டாசுகளை வாங்க, கடை தெருக்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தர்மபுரி நகரை பொறுத்தவரை, சின்னசாமிநாயுடு தெரு, சித்தவீரப்பசெட்டி தெரு, ஆறுமுக ஆசாரி தெரு, முகமதுஅலி கிளப்ரோடு, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் திரண்டனர். இதனால், நேற்று மதியம் முதலே மாநகரில் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கந்தசாமி வாத்தியார் தெரு, சின்னசாமிநாயுடு தெரு, தர்மபுரி நான்குரோடு, நேதாஜி பை-பாஸ் ரோடு உள்ளிட்ட இடங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தர்மபுரி நகர போக்குவரத்து போலீசாரும், ஊர்காவல் படையினருடன் சேர்ந்து போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

 தீபாவளியை முன்னிட்டு, தர்மபுரியில் தங்கி படித்து வந்த மாணவ, மாணவிகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் வெளியூர்களில் வேலை செய்வோர் சொந்த ஊர்களுக்கும் திரும்பினர். இதனால், சேலம், பெங்களூரு, சென்னை செல்லும் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. கோவை, திருப்பூர், கரூர், சேலம், பெங்களூருவில் இருந்து தர்மபுரி மார்க்கமாக வந்த பஸ், ரயில்களில் மக்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர். இதனால், தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி தர்மபுரி வழியாக செல்லும் ரயில்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.  கூட்டம் நெரிசலை கட்டுப்படுத்த தர்மபுரி ரயில் நிலையத்தில், ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 100 சிறப்பு பஸ்கள் இயக்கம் தீபாவளி பண்டிகையையொட்டி, கூட்ட நெரிசலை தவிர்க்க, தர்மபுரி பஸ் ஸ்டாண்டிலிருந்து 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பெங்களூரு, ஓசூர், சென்னை, சேலம் மார்க்கமாக கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது.

Tags : meeting ,Dharmapuri ,Diwali ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி