×

ஆழ்வார்திருநகரியில் நாளை காமராஜர் சிலை திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்

ஸ்ரீவைகுண்டம், அக். 27: ஆழ்வார்திருநகரியில் புதிதாக அமைக்கப்பட்ட வெண்கலத்திலான காமராஜர் சிலை திறப்பு விழா நாளை (28ம் தேதி) நடக்கிறது. முன்னாள் முதல்வர் காமராஜருக்கு ஆழ்வார்திருநகரியில் அகில இந்திய இளம் தமிழர் மன்றம் சார்பில் மறைந்த சிமென்டால் ஆன சிலை அமைக்கப்பட்டது. பல ஆண்டுகள் கடந்த நிலையில், சிலை சேதமடைந்ததை அடுத்து அதை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக அவ்விடத்தில், ஏழரை அடியில் வெண்கலத்திலான புதிய காமராஜர் சிலையை அமைக்கும் பணிகள் பெருந்தலைவர் காமராஜர் சிலை சீரமைப்புக்குழு தலைவரும், முன்னாள் தூத்துக்குடி தெற்குமாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான எஸ்.வி.பி.எஸ்.பொ.ஜெயக்குமார் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
புதிய சிலையை அமைக்க பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டுவந்த நிலையில், இதனையறிந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் மூலமாக வழங்கினார். இதனைத்தொடர்ந்து வெண்லகத்திலான புதிய காமராஜர் சிலை அமைக்கும் பணி  நிறைவடைந்தது.

இதனைத்தொடர்ந்து வெண்கலத்திலான புதிய காமராஜர் சிலை திறப்பு விழா நாளை (28ம் தேதி) காலை 9 மணிக்கு நடக்கிறது. இவ்விழாவில், அகில இந்திய இளம் தமிழர் மன்றத்தினர், பெருந்தலைவர் காமராஜர் சிலை சீரமைப்புக்குழுவினர் மற்றும் அனைத்துக்கட்சிகளையும் சார்ந்த அரசியல் பிரமுகர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், சமுதாயத்தலைவர்கள், வணிகர்கள் சங்கத்தினர் உள்ளிட்டவர்கள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். தொடர்ந்து, காமராஜர் சிலையை அமைப்பதற்கு முழுமூச்சாக செயல்பட்ட சிலை அமைப்புக்குழு தலைவர் எஸ்.வி.பி.எஸ்.பொ.ஜெயக்குமாருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கறிஞர் மகேந்திரன் தலைமையில் பாராட்டு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்விழாவில், அனைத்து அரசியல்கட்சி பிரமுகர்கள், காங்கிரஸ் கட்சியினர், காமராஜர் தொண்டர்கள், பொதுமக்கள் என அனைத்துதரப்பினரும் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்குமாறு தூத்துக்குடி தெற்குமாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் சுயம்புலிங்கம் மற்றும் அகிலஇந்திய இளம்தமிழர் மன்றத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : opening ,Kamarajar ,Alwarthirunagaram ,
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு