×

திசையன்விளை அருகே மர்ம காய்ச்சலுக்கு ஒரே வீட்டில் இரு குழந்தைகள் பலி

திசையன்விளை, அக்.27: திசையன்விளை அருகே ஒரே வீட்டில் அடுத்தடுத்து இரு குழந்தைகள் மர்ம காய்ச்சலுக்கு இறந்தனர். திசையன்விளை அருகேயுள்ள மடத்தச்சம்பாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி அந்தோணிராஜ்(30). இவரது மனைவி புஷ்பலதா(28). காதல் திருமணம் செய்த இவர்களுக்கு ஷாலினி(7) என்ற மகள், நிசாந்த்(5), அஜய்(3) ஆகிய மகன்கள். இதில் மகள், மகன் இருவரும் உள்ளூரில் உள்ள பள்ளியில் 2 மற்றும் 1ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன் சிறுவன் நிசாந்துக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து சிறுவனுக்கு திசையன்விளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பாளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு காய்ச்சல் சரியாகாததால் அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறினர்.

இதைத்தொடர்ந்து நிசாந்த் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி 3 நாட்களுக்கு முன் இறந்தான். அந்த சோகத்தில் இருந்த பெற்றோருக்கு பேரிடியாக மகள் ஷாலினியும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவளை திசையன்விளை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஷாலினியும் நேற்று  முன்தினம் இறந்தார். இரு குழந்தைகள் இழப்பையும் தாங்கி கொள்ளமுடியாத நிலையில் பெற்றோர்கள் அழுது புலம்பிக்கொண்டிருந்தபோது 3வது மகன் அஜய்க்கும் காய்ச்சல் ஏற்பட்டது. அவனை திசையன்விளை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்குப்பின் நோய் ஓரளவு குணமடைந்து அவன் வீடு திரும்பினான். நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இவர்களும் அந்த தாக்குதலுக்கு ஆளாகி இறந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது.
ஒரே வீட்டில் அடுத்தடுத்து இரு குழந்தைகள் மர்ம காய்ச்சலுக்கு இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : children ,house ,Myanmar ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...