×

தென்காசி, களக்காடு கோயில்களில் ஐப்பசி திருக்கல்யாண விழா கோலாகலம்

தென்காசி, அக்.27: தென்காசி, களக்காடு கோயில்களில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 15ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. 23ம்தேதி அம்பாள் தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் காலையில் யானைப்பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து மாலையில் தெற்கு மாசி வீதியில் காசிவிஸ்வநாதர் உலகம்மனுக்கு தபசு காட்சி கொடுத்தல் நடந்தது. இரவில் அம்மன் சன்னதி மண்டபத்தில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. இதில் கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன், மணியம் செந்தில்குமார், கணக்கர் பாலு, இலஞ்சி அன்னையாபாண்டியன் மற்றும் கட்டளைதாரர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.

களக்காடு: களக்காடு  சத்தியவாகீஸ்வரர்-கோமதிஅம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கோலாகலத்துடன் நடந்தது. இதையொட்டி காலையில்  அம்பாள் திருவீதி உலாவாக  திருக்கல்யாணத்தெரு ஆற்றாங்கரையில் உள்ள தபசு மண்டபத்தில் எழுந்தருளினார். மாலையில் சத்தியவாகீஸ்வரர் ரிஷப வாகனத்தில்  எழுந்தருளி கோமதி அம்பாளுக்கு திருக்காட்சி கொடுத்தார். தொடர்ந்து அம்பாள், சுவாமியை வலம் வந்த பின் தோள்  மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. சிறப்பு  தீபாராதனை பின் சுவாமி, அம்பாள் இருவரும்  கோயிலுக்கு புறப்பட்டனர். இரவில் கோயில் கொலு மண்டபத்தில் சுவாமி, அம்பாள்  திருஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சியும், அம்பாளுக்கு திருத்தாலி அணிவிக்கும்  வைபவமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை  களக்காடு சேனைத்தலைவர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.

Tags : temples ,Ipazi Thirukkalayana Festival ,Kalakkadu ,Tenkasi ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு