×

ஆட்சியரின் காரை மறித்து போராட்டம் 8 அரசு அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

கடலூர், அக். 27: நாடாளுமன்ற தேர்தலின்போது வட்டாட்சியர்களால் செலவிடப்பட்ட பணத்தை அவர்கள் திரும்ப பெறுவதற்குள் அவர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டதால் பணியிட மாறுதலை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதி மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது, மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரது காரை முற்றுகையிட்டதோடு, அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாத அளவிற்கு தடை ஏற்படுத்தினர். இதனால், காவல்துறையினர் தலையிட்டு இருவரையும் மீட்டு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இப்போராட்டத்தில் ஈடுபட்டதாக தனி வட்டாட்சியர் (முத்திரைத்தாள்) மகேஷ், நெய்வேலி நில எடுப்பு எண்.4 தனி வட்டாட்சியர் ஆறுமுகம், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜான்பிரிட்டோ, பண்ருட்டி கூடுதல் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சிவக்குமார், விருத்தாசலம் தேர்தல் துணை வட்டாட்சியர் அன்புராஜ், மாவட்ட வழங்கல் துறை பறக்கும்படை தனி வட்டாட்சியர் அன்பழகன், துணை வட்டாட்சியர் (இஐடி பாரி ஆலை) ராஜூ, கடலூர் மண்டல துணை வட்டாட்சியர் ராஜேஷ்பாபு ஆகிய 8 பேருக்கும் விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியராக இருந்து கொண்டு உரிய அனுமதியின்றி மறியல் மற்றும் கோஷமிடும் போராட்டத்தில் ஈடுபட்டு சட்ட திட்டங்களை உதாசீனப்படுத்தியது. இவைகள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் நடத்தை விதி எண்.20ல் கூறப்பட்டுள்ள அரசு பணியாளருக்குரிய நம்பகத்தன்மை மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டது ஆகியவற்றுக்கு 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி எண்.17 பி பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags : ruler ,
× RELATED மக்களவை தேர்தலை முன்னிட்டு...