×

பரவனாற்றங்கரையில் பனை விதைகள் நடும் பணி

கடலூர், அக். 27: கடலூர் ஊராட்சி ஒன்றியம், குடிகாடு ஊராட்சி ஈச்சங்காடு கிராமம் பரவனாறு கரையோரத்தில் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி நேற்று நடந்தது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், பனை விதைகளை நட்டு பணிகளை துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசு பனைமரத்தை தமிழக மரமாக அறிவித்துள்ளது. பனைமரத்தின் அனைத்து பாகங்களும் மனிதவாழ்வியலுக்கு பயன்படக்கூடியதால், தமிழ் இலக்கியத்தில் பனைமரம் “கற்பகத்தரு” என்று அழைக்கப்படுகிறது. தமிழக அரசின் உத்தரவின் பேரில் பனைவிதைகளை அரசு புறம்போக்கு நிலங்கள், கடற்கரை, ஆறுகள் மற்றும் ஏரி, குளம், குட்டைகளின் கரைகளிலும் பனை விதைகளை தோட்டக்கலை துறை மூலம் நடவு செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டு தற்போது கடலூர் மாவட்டம் முழுவதிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில், 660 கிராம ஊராட்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலர்களுடன் ஒருங்கிணைந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 1,75,000 பனைவிதைகள் நடவு செய்யப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கடலூர் வட்டாரத்தில், குடிகாடு கிராம ஊராட்சி ஈச்சங்காடு கிராமத்தில் பரவனாறு கரையோரங்களில் 5000 எண்கள் பனைவிதைகள் நடப்பட்டது என்றார். நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் முருகன், தோட்டக்கலை துணை இயக்குநர் ராஜாமணி, வேளாண்மை உதவி இயக்குநர் பூவராகன், தோட்டக்கலை உதவி இயக்குநர் சிவக்குமார் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பழனிசாமி, பிரேம்குமார் வெங்கடேஷ், கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன், குடிகாடு கிராம ஊராட்சி செயலர் ரமேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரைக்கண்ணன், சண்முத்துகிருஷ்ணன் மற்றும் கிராம பொது மக்கள் கலந்துகொண்டு பனை விதைகளை நடவு செய்தனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது