×

ஆசிய பசிபிக் மண்டல பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட கூடாது

கூடலூர், அக். 27:  விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தலைமையில் தலைவர் முனியாண்டி முன்னிலையில் நிர்வாக செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இளைஞர் அணி தலைவர் ராமச்சந்திரன் வரவேற்றார். இதில் ஆசிய-பசிபிக் மண்டல பொருளாதாரக் கூட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கடந்த 1996ம் ஆண்டு ஒப்பந்தத்தில் அரசு கையெழுத்திட்டதால் தேயிலை, காபி, மிளகு, கரும்பு, தானியங்கள் உள்ளிட்ட அனைத்து விவசாய உற்பத்தி பொருட்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் விளைவாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்திய அரசு ஆசிய-பசிபிக் மண்டல பொருளாதார கூட்டு வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் அது மேலும் விளைவுகளை மோசமாக்கும். விவசாயிகள் வணிகர்கள் சிறு தொழில் செய்வோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதுடன்  வேலைவாய்ப்பு குறையும்.   

இந்த ஒப்பந்தம் விவசாயம் சார்ந்த சந்தைப் பொருட்கள் பலவற்றிற்கு இறக்குமதி வரியை ஏறக்குறைய பூஜ்ஜியத்து கொண்டு வந்துவிடும்.      பல நாடுகள் தங்களது விவசாய விளைபொருட்களை இந்திய நாட்டிற்கு கொண்டு வருவதற்கு தயாராக உள்ளனர். இதனால் விளிம்பு நிலையில் உள்ள நமது விவசாயம், பால் பண்ணை தொழில், பருத்தி காபி தேயிலை உள்ளிட்ட பணப்பயிர்கள் விவசாயம் அதனைச் சார்ந்துள்ள சிறுதொழில்கள் வணிகம் ஆகியவை பாதிக்கப்படும்.    வெளிநாட்டு பெருநிறுவனங்களின் ஆதிக்கம் பெருகும்.  வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கையில் விவசாய நிலங்கள் சிக்கும். விவசாயிகள் நலன்களைப் பாதுகாக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும். எனவே பால் வளம், தோட்டப் பயிர் உற்பத்தி பொருட்கள் உள்ளிட்ட விவசாயத் துறையை இந்த ஒப்பந்தத்துக்குள் கொண்டு வராமலும் கூட்டு வணிக ஒப்பந்தங்களின் ஆதிக்க வரம்புக்குள் வராமலும் தடுக்க விவசாயிகள் ஒன்றிணைய வேண்டும். இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : government ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...