×

பறவைகளுக்காக பட்டாசு தவிர்க்கும் கிராம மக்கள்

சோமனூர், அக். 27: சோமனூர் அருகே உள்ள கிட்டாம்பாளையத்தில் பறவைகளுக்காக பட்டாசு வெடிப்பதை கிராம மக்கள் தவிர்த்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமனூர் அருகே உள்ள கிட்டாம்பாளையம் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள  ஐந்து ஆலமரங்களில் ஐந்தாயிரம் பறவைகள் பல ஆண்டுகளாக தங்கி வருகின்றன. இதில் பகல் நேரங்களில் இரண்டாயிரம் வவ்வால்களும், இரவு நேரங்களில் சுமார் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளும் உள்ளன. பல ஆண்டுகளாக இந்த பறவைகள் அந்த மரங்களில் இருந்து வருவதால் அப்பகுதி மக்கள் தீபாவளி நாளன்று பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகின்றனர். மேலும் அந்த பறவைகளை யாரேனும் தொந்தரவு செய்யவும் அப்பகுதி மக்கள் விடுவதில்லை. குறிப்பாக பள்ளி சிறுவர், சிறுமியர் பறவைகளுக்காக பட்டாசு வெடிப்பதை முழுமையாக தவிர்த்து விட்டு இனிப்பு வழங்கி மகிழ்கின்றனர்.

இது குறித்து கிட்டாம்பாளையம் ஊராட்சி அலுவலக உதவியாளர் மார்க்குட்டி கூறியதாவது, ‘‘இந்த பகுதியில் உள்ள மரங்களில் ஆயிரக்கணக்காக பறவைகள் கடந்த பல ஆண்டுகளாக தங்கியுள்ளது. அவற்றுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் இப்பகுதி மக்கள் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகின்றனர். அதேபோல் மேளதாளம் போன்ற ஒலி எழுப்புவதை முழுமையாக கிராம மக்கள் தவிர்க்கின்றனர். இதனால் கடந்த 25 ஆண்டுகளாக இந்த பகுதியில் பறவைகள் சரனாலயம் போன்று விளங்குகிறது. இவ்வாறு மார்க்குட்டி கூறினார்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...