×

திருட்டு தங்க நகைகளை மீட்பதில் சிக்கல்

கோவை, அக்.27:  கோவை நகர், புறநகரில் மொத்த குற்றங்களில் நகை பறிப்பு குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. நகை பறிக்கும் குற்றவாளிகள், குறிப்பிட்ட சில நகைக்கடைகளில் நகைகளை விற்பனை செய்வதும், அடமானம் வைப்பதும் நடக்கிறது. போலீசாரிடம் சிக்கும் குற்றவாளிகள் கை காட்டும் நகைக்கடையில் போலீசார் சோதனை நடத்தி நகைகளை பறிமுதல் செய்கின்றனர். திருட்டு நகை வாங்கிய குற்றத்திற்கு உடந்தையாக இருந்தால் இந்திய தண்டனை சட்டம் 411 பிரிவின் படி வழக்குப்பதிவு செய்யவேண்டும். இந்த பிரிவில் வழக்குப்பதிவு செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை, அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. குற்றவாளிகள் சிலர் போலீசில் சிக்கும்போது குறிப்பிட்ட சில நகைக்கடை மீது புகார் கூறுவதாக தெரிகிறது. போலீசார் நகைக்கடைக்கு சோதனைக்கு செல்லும்போது வியாபாரிகள் தரப்பில் எதிர்ப்பு காட்டுவது வாடிக்கையாக நடக்கிறது. கோவை போத்தனூர், பெரிய கடை வீதி, மேட்டுப்பாளையத்தில் உள்ள நகைக்கடைகளில் போலீசார் குற்றவாளிகளுடன் சோதனைக்கு சென்றபோது கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கோவையில் 8 ேகாடி ரூபாய் மதிப்பிலான நகைகளுடன் தப்பிய தங்க கட்டி ஏஜன்ட் ஒருவர் மாயமானார். இவர் போலீசில் சிக்கியதும் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து புகார் வாபஸ் பெறப்பட்டது. போலீஸ் தலையீட்டை விரும்பாமல் வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக தெரிகிறது. இதேபோல் சில வழக்குகளில் சமரச பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணப்பட்டது. குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில், ‘‘நீண்ட காலம் பயன்படுத்தி தேய்ந்த நகைக்கும், வாகனத்தில் செல்லும்போது பறிக்கும் நகைக்கும் வித்தியாசம் உண்டு. திருடர்கள் வீடுகளில் திருடும் நகைகளை ஒரே நேரத்தில் மொத்தமாக விற்பதில்லை. தனித்தனியாக சில கடைகளில் விற்கிறார்கள். கேரளா மாநிலத்தில் நகையை உருக்கி கட்டியாக மாற்றி விற்பனை செய்கிறார்கள்.

குற்றவாளிகள் போலீஸ் பிடியில் தப்ப பல யுக்திகளை பின்பற்றுகிறார்கள். நகை கடைகள், அடகு கடைகளில் திருட்டு நகைகளை வாங்கவேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டிருக்கிறோம். வியாபாரிகள் ஒத்துழைப்பு தந்தால் நகை திருட்டு குற்றவாளிகளை பிடிக்க முடியும்’’  என்றனர். நகை வியாபாரிகள் கூறுகையில், ‘‘சரியான ஆவண நடைமுறையை மேற்கொண்டாலும் திருடர்கள் சொல்வதைத்தான் போலீசார் கேட்கிறார்கள். ஐ.பி.சி. 411ன் படி நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுகிறார்கள். பொதுமக்கள் தங்களது நகைக்கு உரிய ஆவணங்களை முறையாக வைத்திருப்பதில்லை. அறுந்த நகை விற்க வந்தால் சந்தேகம் வரும். இதுபோன்ற நகைகளை வாங்க மாட்டோம். ஆனால் வீடுகளில் திருடிய நகைகள் மீது சந்தேகம் வராது’’ என்றனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...