×

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு திங்கட்கிழமை சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்

கோவை, அக். 27:  தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் வால்பாறை அமீது மற்றும் எல்.பி.எப்., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி. மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணியை சந்தித்து மனு கொடுத்தனர். அத்துடன் நீலகிரி, தேனி, நெல்லை, திண்டுக்கல் ஆகிய மாவட்ட கலெக்டர்களுக்கும் அந்த மனுவை அனுப்பி உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கோவை, நீலகிரி, திண்டுக்கல், நெல்லை மற்றும் தேனி மாவட்டங்களில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தேயிலை தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.அவர்களுக்கு ஆண்டுக்கு 14 நாட்கள் விடுமுறை உண்டு.

தீபாவளி பண்டிகையையொட்டி நாளை (திங்கட்கிழமை) அரசு விடுமுறை அறிவித்து உள்ளது. ஆனால் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நாளை விடுமுறைவிடவில்லை. இதனால் தொழிலாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக தொழிலாளர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் கோவையில் உள்ள ஆனைமலை தோட்ட தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதுபோன்று அனைத்து தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags : Tea plantation workers ,holiday ,
× RELATED சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை!