×

தீபாவளி பொருட்கள் வாங்க குவிந்ததால் நாகை கடைவீதி கூட்ட நெரிசலால் திணறியது அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிப்பு

நாகை, அக்.27: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் கூடியதால் நாகை கடைவீதி திணறியது. இந்துக்களின் கொண்டாடும் பண்டிகைகளில் மிகவும் சிறப்பானது தீபாவளி. இந்த பண்டிகையின் போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து பலகாரங்களை வைத்து குடும்பத்தோடு சாப்பிடுவார்கள். பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தாலும் தீபாவளி பண்டிகையின் போது தங்களது சொந்த ஊருக்கு வந்து உறவினர்களுடன் மகிழ்ச்சியோடு கொண்டாடுவது இந்த தீபாவளி பண்டிகை. காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்த பின்னர் புத்தாடைகளை அணிந்து, அசைவ உணவுகள் மற்றும் பலகாரங்களை சமைத்து தங்களது குழந்தைகளுடன் சேர்ந்து படயலிட்டு மகிழ்ச்சியுடன் சாப்பிடுவர். பின்னர் வெடிகளை வெடித்து மகிழ்வது இந்த தீபாவளி பண்டிகை காலத்தில்தான்.

எனவே பண்டிகைக்கு தேவையான புத்தாடைகள் வாங்க நாகை கடைவீதிக்கு குடும்பதோடு நேற்று காலை வந்தனர். இதனால் கடைவீதி, நீலா தெற்கு வீதி, நீலா கீழவீதி ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேபோல் நாகையில் இருந்து வெளியூர் செல்வோர்களும், வெளியூர்களில் இருந்து நாகை நோக்கி வருபர்களும் இருந்தனர். இதனால் நாகை புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. அதேபோல் ரயில்வே ஸ்டேசனில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது. நாகூர், வேளாங்கண்ணி கடைவீதிகளில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் முனைப்புடன் செயல்பட்டனர். இதனால் எங்கு பார்த்தாலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்களின் நலன் கருதி எஸ்பி ராஜசேகரன் உத்தரவின் பேரில் போலீசார் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் போலீசார் பொதுமக்களை விழிப்புணர்வுடன் இருக்க வேண்டி தொடர்ந்து எச்சரிக்கை செய்து கொண்டிருந்தனர். மாநில எல்லையான மேலவாஞ்சூர் ரவுண்டானாவில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பொதுமக்கள் நலன் கருதி நாகை மண்டலத்தில் இருந்து தஞ்சை, திருச்சி, மதுரை, பாண்டிச்சேரி, கும்பகோணம், மயிலாடுதுறை, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு இரவு பகலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

Tags : Diwali ,
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...