×

இன்று தீபாவளி கொண்டாட்டம் மக்கள் கூட்டம் குவிந்ததால் திக்குமுக்காடிய கடைவீதி

கரூர், அக். 27: தீபாவளி பொருட்களை வாங்க கடைசிநேரத்தில் மக்கள் கூட்டம் குவிந்ததால் கடைவீதி திக்கு முக்காடியது. தீபாவளி பண்டிகையையொட்டி கரூர் ஜவகர் கடைவீதியில் உள்ள ஜவுளி, நகை, பாத்திரம் போன்ற கடைகளில் 5 நாட்களுக்கு முன்னரே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அரசின் பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக தொழில் நசிவு, வேலையிழப்பு ஏற்பட்டதன் எதிரொலியாக இந்த ஆண்டு தீபாளிக்கு முதல்நாளான நேற்றுதான் மக்கள் கடைவீதிக்கு வந்தனர். கடைசி நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் கடைவீதி திக்கு முக்காடியது. கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தற்காலிக கடைகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்தன. இங்கும் தீபாவளி பொருட்களை வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர். மைதானத்தின் பின்புறம், மற்றும் ஜவகர் கடைவீதியில் போக்குவரத்தை போலீசார் தடை செய்தனர். மாற்றுப்பாதையில் அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டன.

கரூர் மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் உத்தரவின் பேரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க உழவர் சந்தை, முத்துராஜபுரம், நரசிம்மபுரம், ஈசுவரன் கோயில் பகுதிகளில் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 360டிகிரியில் சுழலும் கண்காணிப்பு கேமரா, 2 இடங்களில் பறக்கும் கேமரா (ட்ரோன்), 24இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

Tags : Diwali Celebration ,
× RELATED கொரோனா அச்சுறுத்தல் குறையும்...