×

வனத்துறை சார்பில் நடந்த குறைதீர் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணிப்பு உயரதிகாரி வராததால் அதிருப்தி

திருவில்லிபுத்தூர், அக்.25:  திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நேற்று திருவில்லிபுத்தூரில் உள்ள வன விரிவாக்க மைய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விவசாயிகள் திடீரென கூட்டத்தை புறக்கணித்து அலுவலகத்தின் வெளியில் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது புறக்கணிப்பு குறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயமுருகன், தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முத்தையா கூறுகையில், ‘‘மலையடிவார விவசாயிகள் தொடர்ந்து தினமும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். யானை, காட்டுப்பன்றி, காட்டெருமை, அணில் போன்ற விலங்குகளால் பயிர்கள் நாசமாகின்றன. இதுகுறித்து உரியமுறையில் வனத்துறை அலுவலகத்தில் மனு கொடுத்தால் உரிய இழப்பீடு பெற்றுத் தருவதில்லை. இதை தெரிவிக்கும் பொருட்டு குறைதீர் கூட்டத்திற்கு வந்தால், இங்கு மாவட்ட வன அலுவலர் தொடர்ந்து   கூட்டத்திற்கு வரவில்லை.
வனச்சரக அலுவலர்களை வைத்து கூட்டத்தை நடத்துகின்றனர்.

அவர்கள் செய்கிற தவறுகளை சொல்வதற்காக வந்தால் அவர்களிடமே சொல்லக்கூடிய நிலைமை உள்ளது. மாவட்ட வன அலுவலர் அடுத்த கூட்டத்தில் கூட்டத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கிறோம்.குறைதீர் கூட்டத்துக்கு முறையான தகவல்கள் அனுப்புவது கிடையாது. எனவே பெரும்பாலான விவசாயிகள் இதில் கலந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறைந்த அளவு விவசாயிகளே கலந்து கொள்கின்றனர்’’ என்றனர்.
இதன்பின்னர் வனவிரிவாக்க மையத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்தையா தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயமுருகன் பேசினார். தமிழக விவசாய சங்கம் மாவட்ட செயலாளர் அம்மையப்பன் மற்றும் இருளப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்ட ஏசிஎப் அல்லிராஜ் கூறுகையில், ‘‘விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் மாவட்ட வன அதிகாரி பங்கேற்றார். இந்த முறை அலுவல் பணி காரணமாக சென்னையில் உள்ளதால் அவர் கலந்துகொள்ள இயலவில்லை. இதற்கு முன்பு கூட்டத்தின்போது மாவட்ட வன அதிகாரி பயிற்சியில் வெளியூரில் இருந்ததால் பங்கேற்க இயலவில்லை. எனவே இனிமேல் வரும் காலங்களில் மாவட்ட வன அதிகாரி கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும். நேற்றைய கூட்டத்தை பொறுத்தவரை நான் மற்றும் திருவில்லிபுத்தூர் ராஜபாளையம் வத்திராயிருப்பு மற்றும் வேளாண்மைத் துறையில் இருந்து அதிகாரி ஒருவரும் வருவாய்த்துறை அதிகாரியும் கலந்து கொண்டனர்’’ என தெரிவித்தார்.

Tags : meeting ,Forest Department ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...