×

ஆங்கிலேயர்கள் கட்டியது 142 ஆண்டு பழமை பாலம் பாதுகாக்கப்படுமா? சேதமடைந்து வருகிறது சாத்தூர் மக்கள் எதிர்பார்ப்பு

சாத்தூர், அக்.25: சாத்தூரில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட 142 ஆண்டுகள் பழமையான பாலத்தை பாதுகாக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். சாத்தூர் வைப்பாற்று பகுதியை கடப்பதற்காக ஆங்கிலோயர் ஆட்சி காலத்தில் வைப்பாற்றின் குறுக்கே பாலம் அமைக்க முடிவு செய்தனர். அதன்படி 1863ம் ஆண்டு பாலம் அமைக்கும் பணியை துவங்கப்பட்டது. 1867ம் ஆண்டு பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. 14 அடி அகலமும் 840 அடி நீளமும் கொண்டதாக அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் குதிரைகள் பூட்டப்பட்ட ஜட்கா வண்டிகள் மட்டும் செல்வதற்காகவே இந்த பாலம் கட்டப்பட்டது. வருடங்கள் கடந்த பின்னர் இந்த பாலத்தில் கனரக வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களும் செல்ல தொடங்கின. குதிரை வண்டிகள் மட்டுமே செல்லும் அளவில் அமைக்கப்பட்ட பாலத்தில் போக்குவரத்து அதிகம் நிறைந்த இத்தருணத்தில் பாலத்தில் எதிரும் புதிருமாக வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 156 ஆண்டுகளை கடந்தாலும் பாலம் கம்பீரமாகவும் உறுதியாகவும் இருந்து வந்ததாக நெடுஞ்சாலைதுறையினர் கூறுகின்றனர். சாத்தூர் பிரதான சாலையில் உள்ள இந்த பாலம் வழியாக கோவில்பட்டியை கடந்து கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம். சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் வரும் நாட்களில் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அந்த சமயங்களில் இருபக்கமும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டது.

இதனால் புதிய பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் பழைய பாலத்தை இடிக்காமல் பாதுகாக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து பழைய பாலத்தை இடிக்காமல் அதன் அருகிலே புதிய பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புதிய பாலம் அமைக்க தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார். நிதி ஒதுக்கீடு செய்து ஒரே நேரத்தில் இரண்டு வாகனம் செல்லும் அளவிற்கு புதிய பாலம் அமைக்கப்பட்டு தற்போது அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன.
ஆனால் பழைய பாலத்தை அதன்பிற்க நெடுஞ்சாலைதுறையினர் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இதனால் பாலம் தற்போது சமூக விரோதிகளின் புகழிடமாக மாறி வருகிறது. ஆங்காங்கே பாலம் சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பாலத்தில் விளக்குகள் அமைக்க வேண்டும். சாலையை சீர் செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனை அமீர்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதி மக்கள் நடைபயிற்சிக்காகவாவது பயன்படுத்தி கொள்ளலாம். பாலம் உடனே சீரமைக்கப்படுமா?

Tags : bridge ,British ,
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!