×

பெயரை மாற்றி இந்தியாவிற்கு வந்து கைதாகி முகாம் சிறையிலிருந்து தப்பி சிக்கிய நைஜீரியா வாலிபர் நாடு கடத்தல்

திருச்சி, அக்.25: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் 41 இலங்கை தமிழர்கள், நைஜீரியாவை சேர்ந்த 4 பேர் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 48 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் நைஜீரியாவை சேர்ந்த ஸ்டீவன்பால் அபுச்சி(31) என்பவர் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர், அவர் திருச்சி முகாம் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் கடந்த ஜூலை 19ம் தேதி காலை சிறையில் சுவற்றின் அருகே இருந்த 25 அடி உயர பெரிய மரத்தில் ஏறி, சிறைக்கு வௌியே உள்ள மற்றொரு மரத்தின் வழியாக இறங்கி கொட்டப்பட்டு இந்திரா நகர் வழியே ஸ்டீவன் தப்பிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். மேலும் தனிப்படை போலீசாரும் தேடி வந்தனர். இந்நிலையில் ஸ்டீவன் பால் அபுச்சி டெல்லியில் பதுங்கி இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார் செப்.13ம் தேதி டெல்லி சென்று அவரை கைது செய்தனர்.

தொடர்ந்து அங்கிருந்து ரயிலில் திருச்சிக்கு செப்.16ம் தேதி அழைத்து வந்து ஜேஎம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட், சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து பலத்த பாதுகாப்புடன் சென்னை புழல் சிறைக்கு ஸ்டீவன் பால்அபுச்சி கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். தொடர்ந்து ஸ்டீவன் பால்அபுச்சியை மீண்டும் அவரது நாட்டுக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநகர கமிஷனர் அமல்ராஜ் எடுத்து வந்தார். அப்போது அவரின் உண்மையான பெயர் மதுபுச்சி ஸ்டான்லி என்பது தெரியவந்தது. தொடர்ந்து பெயர் மாற்றி இந்தியாவில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கான முறையான ஒரிஜினல் ஆவணங்கள் பெற்ற போலீசார் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுபுச்சி ஸ்டான்லி நைஜீரியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags : teenager ,Nigerian ,India ,prison camp ,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...