×

மக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்த 100% மானியத்தில் பூச்சிக்கொல்லி தெளிப்பு திட்டம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு

தஞ்சை, அக். 25: தஞ்சை மாவட்டத்தில் மக்காச்சோளத்தில் காணப்படும் அமெரிக்கன் படைப்புழுவை ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தும் விதமாக 100 சதவீத மானியத்தில் பூச்சிகொல்லியை விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை வழங்கி வருகிறது. இதில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஜஸ்டின் தெரிவித்ததாவது: தஞ்சை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 1,005 ஹெக்டேரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. இதுவரை 800 ஹெக்டேரில் அறுவடை செய்யப்பட்டு விட்டது. மீதமுள்ள மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழுக்களின் தாக்குதல் தென்படுகிறது. இதனால் மக்காச்சோள பயிர் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும். எனவே தமிழக அரசே விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பூச்சி கொல்லியையும், அந்த மருந்துகளை தெளிக்க தேவையான கூலி ஆட்களை கொண்டு மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் பூச்சிக்கொல்லி தெளிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதற்காக ஹெக்டேருக்கு ரூ.3,500 மதிப்பிலான ஸ்பைனிடோரம் என்ற பூச்சிக்கொல்லியையும், பூச்சிக்கொல்லி தெளிப்பு கூலியாக ரூ.1,000 வழங்குகிறது. மேலும் வேளாண்மைத்துறை மூலம் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ள இடங்களில் தாய் படைப்புழுவை பிடிக்கும் விதமாக இனக்கவர்ச்சி கூண்டுகளும் வைக்கப்பட்டுள்ளது. எனவே மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் உடனடியாக தங்களது சோளப்பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் தென்பட்டால் அருகில் உள்ள வேளாண் அலுவலர்கள் மூலம் அணுகி உரிய பூச்சிக்கொல்லியை தெளிக்க வேண்டும்.
அதேபோல் தஞ்சை மாவட்டத்தில் 30 ஆயிரம் ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 6 ஆயிரம் ஹெக்டேரில் நெல் தெளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரத்தநாடு கோட்டம் ஈச்சங்கோட்டை பகுதியில் 175 ஹெக்டேரில் ஆடுதுறை 39 ரக நெல் விதைக்கப்பட்டுள்ளது. இந்த நெற்பயிர் நன்றாக தூர் வெடித்துள்ளது. நேரடி நெல் விதைப்பு மூலம் நாற்று விடுதல், நடவு நடுதல், களை அகற்றுதல் ஆகிய பணிகளுக்கான விவசாய கூலி செலவு குறைந்துள்ளது.

இந்த முறையில் நெல் தெளிக்கும்போது குறைவான தண்ணீர் இருந்தால் போதுமானது. குறிப்பிட்ட நாட்களுக்குள் அறுவடை செய்ய முடியும். இந்த திட்டத்துக்கு மாநில அரசு ஏக்கருக்கு ரூ.600 வீதம் உழவு மானியத்தை வழங்கி வருகிறது என்றார். சாக்கோட்டை உழவர் பயிற்சி மைய துணை இயக்குனர் மதியரசன், வேளாண்மை உதவி இயக்குனர்கள் சாருமதி, அய்யம்பெருமாள் மற்றும் வேளாண் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Control American Creamery ,Maize ,
× RELATED மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து ஆய்வு