×

தஞ்சை பகுதியில் தொடர் மழை துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

தஞ்சை, அக். 25: தஞ்சை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் 3 லட்சம் வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் தினம்தோறும் 5 டன் குப்பைகளை சேகரிக்கப்பட்டு கிடங்குக்கு வாகனங்களில் கொண்டு சென்று கொட்டப்பட்டு வருகிறது. துப்புரவு பணியில் 100க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளில் குப்பைகளை சேகரித்து அங்குள்ள இரும்பு குப்பை சேகரிக்கும் பெட்டியில் கொட்டுகின்றனர். பின்னர் லாரியில் குப்பைகளை எடுத்து செல்கின்றனர்.

தஞ்சை மாநகரில் வைக்கப்பட்டுள்ளபெரும்பாலான இரும்பு குப்பை தொட்டிகள் உடைந்து காணப்படுகிறது. இதனால் தொட்டியில் கொட்டப்படும் குப்பைகள் சாலைகளில் சிதறி கிடக்கிறது. இந்த குப்பைகளை அள்ளுவதற்குள் துப்புரவு தொழிலாளர்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். துப்புரவு தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை. இதனால் தற்போது மழை காலத்தில் துப்புரவு தொழிலாளர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து துப்புரவு தொழிலாளர்களிடம் கேட்டால், போதுமான வருமான இல்லாத நிலையில் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்பதால் வேறு வழியின்றி இந்த பணியை செய்து வருகிறோம் என்கின்றனர். எனவே துப்புரவு தொழிலாளர்களுக்கு மழைகோட், கையுறை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : activists ,area ,Tanjore ,
× RELATED தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு...