×

குடந்தையில் குற்ற சம்பவங்களை தடுக்க 300 சிசிடிவி கேமரா உதவியுடன் கண்காணிப்பு டிஎஸ்பி தகவல்

கும்பகோணம், அக். 25: தீபாவளி பண்டிகையையொட்டி கும்பகோணம் நகர பகுதியில் பொதுமக்கள் கூடும் இடங்களில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக 300 சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் கண்காணிக்கப்படுகிறது என்று டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தெரிவித்தார். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள கடைவீதிகளில் புத்தாடை, பட்டாசு மற்றும் பல்வேறு பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இதையொட்டி பொதுமக்கள் கூடும் இடங்களில் அசம்பாவிதம், திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும் கும்பகோணம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளிக்கு 2 நாட்களே உள்ள நிலையில் கும்பகோணம் பகுதியில் பல்வேறு பொருட்களை வாங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இதையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பு நலன்கருதி கும்பகோணம், சாரங்கபாணி கோயில் சன்னதி, பெரிய தேர் அருகே அமைக்கப்பட்டுள்ள காவல் உதவி மையத்தை டிஎஸ்பி ஜெயச்சந்திரன் திறந்து வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், ராமமூர்த்தி, அருணாச்சலம் மற்றும் போலீசார் பங்கேற்றனர். பின்னர் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் கூறுகையில், தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் கும்பகோணம் நகரத்துக்கு பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீசாருடன் ஊர்க்காவல் படையினர் இணைந்து பணியாற்றுகின்றனர்.

குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க சாதாரண உடையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் நகரம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட ரகசிய கேமராக்கள் மூலம் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. உடனுக்குடன் குற்ற சம்பவங்கள் கண்டறியப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காவல் உதவி மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பணியில் உள்ளனர். இதன்மூலம் பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Tags : DSP ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...