×

அரியலூர் மாவட்டத்தில் மக்காச்சோள பயிருக்கு இலவசமாக மருந்து தெளிப்பு விவசாயிகள் பயன்பெற அழைப்பு

அரியலூர், அக். 25: அரியலூர் மாவட்டம் பொட்டவெளி மற்றும் நக்கம்பாடியில் வேளாண்மைத்துறை சார்பில் மக்காச்சோள படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த மருந்துகள் தெளிக்கப்படும் நிகழ்ச்சி நடந்தது. வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை துவக்கி வைத்து அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் பேசுகையில், தமிழ்நாட்டில் கடந்தாண்டு மக்காச்சோள படைப்புழு தாக்குதலால் விவசாயிகளுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டதால் அரசால் நிவாரணம் வழங்கப்பட்டது. படைப்புழு தாக்குதலை தடுப்பதற்காக அனைத்து கிராமங்களிலும் உள்ள விவசாயிகளின் மாக்காச்சோள பயிருக்கு இலவசமாக மருந்து தெளிப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அரியலூர் மாவட்டத்தில் அனைத்து வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், படைப்புழு பரவாமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் 31,057 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. இதில் 2,048 ஏக்கர் அறுவடை நிலையில் உள்ளது. மீதமுள்ள பகுதிகளில் 25 முதல் 40 நாள் உள்ள மக்காச்சோள பயிரில் ஏற்படும் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு இலவசமாக மருந்துகள் தெளிக்கப்படுகிறது.

இதுதொடர்பான ஆய்வுக்கூட்டம் வேளாண் இயக்குனர்தலைமையில் அனைத்து வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் நடத்தப்பட்டது. இதில் அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் துரிதமாக பணிகளை மேற்கொள்ளுமாறும், ஒரு வாரத்திற்குள் அனைத்து கிராமங்களிலும் மருந்துகள் தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் அனைவரும் தங்களது விவசாய நிலங்களில் மக்காச்சோள படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் மருந்துகளை தெளித்து அதிக மகசூல் பெற்று பயனடையலாம் என்றார்.
இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, துணை இயக்குனர் பழனிச்சாமி, உதவி இயக்குனர் சுரேஷ், வேளாண் விஞ்ஞானி சந்திரசேகர் மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள், வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...