×

ஆட்சிமொழி திட்டம் செயலாக்கம் பெரம்பலூர் நகராட்சி முதலிடம் கலெக்டர் பரிசு வழங்கினார்

பெரம்பலூர், அக். 25: பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சி மொழி திட்டம் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய பெரம்பலூர் நகராட்சிக்கு முதல் பரிசை கலெக்டர் சாந்தா வழங்கினார். பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2 நாள் ஆட்சிமொழி பயிலரங்கம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. முதல் நாள் நடந்த ஆட்சிமொழி பயிலரங்கத்தை பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சித்ரா வரவேற்றார்.

பின்னர் நடந்த பயிலரங்கில் ஆட்சிமொழி வரலாறு சட்டம் என்கிற தலைப்பில் கோவை தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனரும், மதுரை உலக தமிழ் சங்க இயக்குனருமான (பொ) அன்புச்செழியன் பேசினார். தமிழில் பிழையின்றி எழுதுதல் குறித்து தமிழறிஞர் வெற்றியழகன் பேசினார். அலுவலக குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல் குறித்து முன்னாள் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் சிவசாமி பேசினார்.
இதைதொடர்ந்து பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த 2ம் நாள் ஆட்சி மொழி கருத்தரங்கில் கலெக்டர் சாந்தா சிறப்புரையாற்றினார். மொழி பயிற்சி, மொழிபெயர்ப்பு, கலை சொல்லாக்கம், ஆட்சிமொழி திட்ட செயலாக்க விளக்கவுரை ஆகிய தலைப்புகளில் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் பயிற்சி அளித்தனர்.

கருத்தரங்கம் முடிவில் 2017ம் ஆண்டில் ஆட்சி மொழி திட்டம் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகமாக பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்துக்கு கலெக்டரால் பாராட்டப்பட்டு கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த பயிலரங்கத்தில் அரசு அலுவலர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

Tags : Perambalur Municipality ,Collector ,
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா