×

4 கிராமங்களில் இன்று சிறப்பு திட்ட முகாம் பொதுமக்களுக்கு அழைப்பு

பெரம்பலூர், அக். 25: பெரம்பலூர் மாவட்டத்தில் 4 கிராமங்களில் சிறப்பு திட்ட முகாம்கள் இன்று நடக்கிறது. பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு திட்ட முகாம் இன்று நடக்கிறது. அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவைகளை வழங்குவதற்காக தமிழக அரசின் சார்பாக சிறப்பு திட்ட முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி வருவாய் வட்டாட்சியர் தலைமையில், வருவாய்த்துறை அலுவலர்கள் பொதுமக்களை தேடிச்சென்று அவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் திட்ட முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல்லாத இனங்கள்), சிட்டா நகல்கள், ஆதார் அட்டைகள் பெற பதிவு செய்தல், குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ், வாரிசுரிமை சான்றிதழ், சிறு மற்றும் குறுவிவசாயிகளுக்கான சான்றிதழ், முதல் பட்டதாரி அல்லது குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகை கோரும் மனுக்கள், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் உதவிகள் பெற சமர்பிக்கப்படும் மனுக்கள், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், துயர்துடைப்பு மற்றும் விபத்து நிவாரணம் கோரும் மனுக்கள் மீதான அறிக்கை, மேலும் ஒரே நாளில் தீர்வு காணக்கூடிய இதர மனுக்கள் மீது ஆணைகள் பிறப்பித்தல் ஆகியவை அன்றைய தினமே உடனடியாக பரிசீலிக்கப்பட்டு ஆணைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டு ஒப்புகை சீட்டு வழங்கப்படுகின்றன. உடனடியாக முடிவு செய்ய இயலாத விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதில் சம்மந்தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். இதன்படி இன்று (25ம் தேதி) பெரம்பலூர் தாலுகாவில் பெரம்பலூர் (தெற்கு) கிராமத்திலும், குன்னம் தாலுகாவில் ஒகளூர் (கிழக்கு) கிராமத்திலும், வேப்பந்தட்டை தாலுகாவில் அரும்பாவூர் கிராமத்திலும், ஆலத்தூர் தாலுகாவில் நக்கச்சேலம் கிராமத்திலும் என 4 கிராமங்களில் சிறப்பு திட்ட முகாம்கள் நடக்கிறது. பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வந்து செயல்படுத்துவதற்கான இந்த முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : project camp ,villages ,
× RELATED என்எஸ்எஸ் திட்ட முகாம்