×

சிவகங்கை தெப்பகுளத்தில் பெரியாறு அணை நீர் நிரப்பப்படுமா?

சிவகங்கை, அக். 25: சிவகங்கை தெப்பகுளத்தில் பெரியாறு நீர் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை நகரின் மைய பகுதியில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவுள்ள தெப்பக்குளம் 300 ஆண்டுகள் பழமையானது. 1985ல் மாவட்டத்தின் தலைநகராக சிவகங்கை அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு இங்கு பல்வேறு அரசு அலுவலகங்கள், பொதுமக்களுக்கான குடியிருப்புகள், விரிவாக்கமடைந்து வரும் எல்கைப்பகுதிகள் என நகர் வளர்ச்சியடைந்து வருகிறது. தற்போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் இங்குள்ள தெப்பக்குளம் மக்களின் அன்றாட பயன்கள், கோயில் சடங்குகள், இறப்பு சடங்குள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்பட்டு வருகிறது. மேலும் குளத்தில் நீர் இருந்தால் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு ஆழ்குழாய் அமைக்கும் போது நிலத்தடி நீர் பிரச்னை இருக்காது. பல ஆண்டுகளாக தெப்பக்குளத்தில் இருந்த சேறும், சகதியும் கடந்த 2013ம் ஆண்டில் அகற்றப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் பராமரிப்பு பணி நடந்தது. ஆனால் சிவகங்கை நகரில் கூடுதல் மழை பெய்தாலும் தெப்பக்குளத்திற்கு போதிய நீர்வரத்து இல்லை. தெப்பக்குளத்திற்கு வரக்கூடிய மழைநீர் சேகரிப்பு பகுதியான காஞ்சிரங்கால் கிராமம், புதூர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் பகுதி முழுவதுமிருந்து மழை நீர் செட்டியூரணி வந்து அங்கிருந்து தெப்பக்குளம் செல்கிறது. தற்போது மழைநீர் செல்லும் பகுதிகளில் கலெக்டர் அலுவலகம் மற்றும் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு முழுமையான குடியிருப்பு பகுதியாக மாறியுள்ளது.

இதனால் மழை பெய்தாலும் வரத்து கால்வாய்கள் சரிவர இல்லாததால் தெப்பக்குளத்திற்கு கூடுதல் நீர் வருவதில்லை. பெயரளவிற்கே நீர் வருகிறது. பெரியாறு விஸ்தரிப்பு கால்வாய் சிவகங்கை அருகிலுள்ள சோழபுரம், காஞ்சிரங்கால் வரை உள்ளது. அங்கிருந்து சிவகங்கை தெப்பகுளத்திற்கு நீர் கொண்டு வருவதற்கான கால்வாய் உள்ளது. ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு இக்கால்வாய் வழியாக பெரியாறு நீர் கொண்டு வரப்பட்டு தெப்பக்குளம் நிரப்பப்பட்டது. கடந்த ஆண்டும் தெப்பக்குளத்திற்கு சிறிதளவு நீர் கொண்டு வரப்பட்டது. எனவே தற்போது சிவகங்கை மாவட்டத்திற்கு பெரியாறு கால்வாயில் நீர் வழங்கும் நிலையில் தெப்பக்குளத்திலும் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சியினர் கூறியதாவது, ‘பெரியாறு நீர் திறந்துவிடப்பட்டுள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிவகங்கை தெப்பக்குளத்தில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு தெப்பக்குளத்தில் கூடுதல் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தெப்பக்குளத்தில் நீர் நிரப்பினால் பல ஆண்டுகள் வரை நீர் குளத்தில் இருக்கும். நிலத்தடி நீர் ஆதாரமும் பாதுகாக்கப்படும். எனவே நீர் கொண்டு வருவதற்கான பணிகளை செய்ய மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : dam ,Periyar ,Sivaganga Tepekulam ,
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...