×

டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தி ஈரோட்டில் ரூ.4 லட்சம் அபராதம் வசூல்

ஈரோடு, அக். 25: ஈரோடு மாநகராட்சி 3வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் டெங்கு பரப்பும் கொசுப்புழுக்களை கண்டறிந்து  அழிக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த ஒருவாரமாக நடந்த ஆய்வில் 4 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதன்மூலம் டெங்கு காய்ச்சல் பரவுவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொசுப்புழுக்களை கண்டறிந்து அவற்றை அழிக்கும் பணிகள் நடந்து வருகிறது. கலெக்டர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆங்காங்கே ஆய்வு நடத்தி வருகின்றனர். தியேட்டர்கள், வீடுகள், வணிக வளாகங்களில் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி 3வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

கலைமகள் பள்ளி, எஸ்கேசி ரோடு மாநகராட்சி பள்ளி ஆகிய பள்ளிகளில் நடந்த ஆய்வில் டெங்கு கொசுப்புழுக்களை உருவாக்கும் வகையில் இருந்த பயன்பாடற்ற பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் தேங்கியிருந்த இடங்கள் உடனடியாக தூய்மைப்படுத்தப்பட்டது. சென்னிமலை ரோட்டில் உள்ள போக்குவரத்து அலுவலகம் மற்றும் பணிமனையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், வாகனங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பழைய டயர்கள், பிளாஸ்டிக் கேன்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காத வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல நீரில் டெங்கு கொசுவை உற்பத்தி செய்யும் லார்வா புழுக்கள் உருவாவதை தடுக்க ஆலோசனை வழங்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக 3வது மண்டல பகுதிகளில் நடந்த ஆய்வில் 4 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Tags : dengue mosquitoes ,
× RELATED டெங்கு கொசுவை ஒழிக்க நடவடிக்கை