×

செக்போஸ்ட் அமைத்ததற்கு கண்டனம் தெரிவித்து பழங்குடியினர் காத்திருப்பு போராட்டம்

ஊட்டி, அக். 25: குன்னூர் அருகே பழங்குடியின மக்கள் பயன்படுத்தி வந்த பாதையில் செக்போஸ்ட் அமைத்ததற்கு கண்டனம் தெரிவித்து மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் சி.பி.எம்., கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குன்னூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொலக்கம்பை அருகே மூப்பர்  காடு, ஊஞ்சலார்கொம்பை, மருதல் கொம்பை கிராமங்களில் ஏராளமான பழங்குடியின  மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் மருத்துவ வசதி உள்ளிட்டவைகளுக்கு 25 கி.மீ., தொலைவில் உள்ள முள்ளிக்கு, பரளி பவர்ஹவுஸ் வழியாக சென்று வந்தனர். இந்த வழியில் கடந்த 6 மாதமாக இங்குள்ள தனியார் எஸ்டேட் அருகே காரமடை வனத்துறையினர் செக் போஸ்ட் அமைத்து அதை பூட்டி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த பாதையை மழைவால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் மா.கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்கள் செல்ல இடையூறாக அமைக்கப்பட்டுள்ள செக்ேபாஸ்ட் அருகே நேற்று முன்தினம் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 போராட்டத்திற்கு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அடையாள் குட்டன், கோவை மாவட்ட செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் தலைமை தாங்கினர். சி.பி.எம்., மாநில குழு உறுப்பினர் பத்ரி, இடைக் கமிட்டி செயலாளர்கள் ஆல்தொரை, சங்கரலிங்கம், மாவட்ட குழு உறுப்பினர் சுப்ரமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில், ராமன் குட்டி, ஆரோக்கியநாதன், கிளை செயலாளர் தேவி, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  முடிவில், மாவட்ட துணை தலைவர் ருக்குமணி நன்றி கூறினார்.  இதனிடையே கொலக்கொம்பை போலீசார் மற்றும் காரமடை வனத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வரும் 30ம் தேதிக்குள் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். அவசர தேவைகளுக்காக தற்காலிகமாக செக்போஸ்ட் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

Tags :
× RELATED எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் புதிதாக 1940...