×

திருப்பூர், தாராபுரத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருப்பூர்,அக்.25: திருப்பூர், மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை நிப்ட்-டீ கல்லூரி சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. திருப்பூர், முதலிபாளையம் சிட்கோ பகுதியில் மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை சார்பில் ‘டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு’ நிகழ்ச்சி நடைபெற்றது.  அப்பகுதியில் அமைந்துள்ள ‘நிப்ட்-டி பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரி’ மாணவர்கள் விழிப்புணர்வு முகாமில் பங்கேற்றனர். இதில், கலந்து கொண்ட மாணவர்கள் சிட்கோ பஸ் நிறுத்தம் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், சுற்றுப்புறத் தூய்மை குறித்தும்  விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலம் சென்றனர். அதனைத்தொடர்ந்து, முதலிபாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களுக்கும் ‘நிலவேம்புக் கசாயம்’ வழங்கப்பட்டது.  இதில், கலந்துகொண்ட மாவட்ட சுகாதார பணிகள் துறையின் துணை இயக்குநர் ஜெயந்தி கூறியதாவது: ‘டெங்கு காய்ச்சல் காரணமாக மனிதர்களின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கிறது. பொதுவாக வீடுகளில் மழைநீர் தேங்குவதால், அதிலிருந்து உருவாகும் கொசு மூலமாகவே டெங்கு காய்ச்சல் பரவுகிறது.  இதனால் மழைநீர் மற்றும் வீடுகளில் ஆங்காங்கே தேங்கியிருக்கும் நீராதாரங்களை சுத்தம் செய்ய வேண்டும்.  வீட்டில் அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்களில் ஊற்றப்படும் அதிகப்படியான நீரிலும் கொசுக்கள் உற்பத்தியாகிறது.

அவ்வகையான தாவரங்களுக்கு ஈரப்பதம் இருந்தாலே போதுமானது. மேலும் வீடுகளில் பயன்படுத்தும் குளிர்சாதன பெட்டிகளில் அருகில் தேங்கியிருக்கும் நீரிலிருந்தும் கொசுக்கள் உற்பத்தியாகிறது.  அவ்வாறு, நீர் தேங்காதவாறு கவனமாக இருந்தால் கொசுக்கள் மூலமாக உண்டாகும் 12 வகையான நோய்களிலிருந்து நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம். பப்பாளி இலைகளை சாப்பிடுவதாலும், நிலவேம்பு கசாயம் குடிப்பதாலும் டெங்கு காய்ச்சலிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். பெரும்பாலும் வீடுகளில் கொசுமருந்துகள் உபயோகித்தாலும், அவைகளும் உடலுக்குக் கெடுதல் என்பதால், கொசுவலை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டும்’ என வலியுறுத்தினார். மேலும், இதில் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தாராபுரம்: தாராபுரத்தில் நேற்று டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நகராட்சி அலுவலகம் முன்பாக துவங்கியது. சப்-கலெக்டர் பவன்குமார் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். எம்எல்ஏ காளிமுத்து, டாக்டர்.ஜார்ஜ் சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள் பலர் போலியோ மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும் பேரணியில் பங்கேற்றனர்.நகராட்சி அலுவலகத்தின் முன்பிருந்து துவங்கிய பேரணி பூங்கா சாலை, வட்டாட்சியர் அலுவலக சாலை, சர்ச்சில் சாலை வழியாக சென்று அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது.

Tags : Dengue eradication awareness rally ,Tirupur ,Dharapuram ,
× RELATED மாவட்டத்தில் 78 இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி