×

நெல் சாகுபடியில் இலைச்சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை

புதுக்கோட்டை, அக்.25: நெல் சாகுபடியில் இலைச்சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்தி உயர்விளைச்சல் பெற்றிடுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சுப்பையா கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:
இலைச்சுருட்டு புழுக்கள் நெற்பயிரின் இலைகளிலுள்ள பச்சையத்தை சுரண்டி உண்பதால் இலைகளில் வெள்ளை வெள்ளையாக காணப்படும். இவ்வாறு பச்சையம் முழுவதும் சுரண்டப்பட்ட நிலையில் பயிர் எரிந்ததுபோல் காணப்படும். இதன் தாக்குதல் வயல் ஓரங்களில் நிழலான பகுதிகளிலும் அதிக உரமிட்ட பகுதிகளிலும் மிகுந்து காணப்படும். புரட்டாசி மாதத்திலிருந்து மார்கழி மாதம் வரை தாக்குதல் அதிகமிருக்கும்.

இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வரப்புகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தழைச்சத்தினைப் பரிந்துரை அளவுக்கு மேல் இடாமல், தேவையான தழைச்சத்தினை மூன்று அல்லது நான்கு தடவையாகப் பிரித்து இட வேண்டும். விளக்கு பொறியினை மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை எரியவிட்டு தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்தழிக்கலாம். முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஏக்கருக்கு இரண்டு சி.சி. அளவு, நடவு செய்த 37, 44 மற்றும் 51ம் நாட்களில் காலை நேரத்தில் வயலில் விட்டு இப்புழுவின் முட்டைக் குவியலை அழிக்கலாம்.

ஒரு கூடைத் தவிட்டில் 100 மி.லி. மண்எண்ணை கலந்து வயலில் விசிறுதல் வேண்டும். ஏறத்தாழ எட்டடி நீளமுள்ள வைக்கோல் பிரியை வயலின் இரு பக்கங்களிலும் பக்கத்திற்கொருவர் பிடித்துக்கொண்டு நெற்பயிரின் மேல் நன்கு படுமாறு இழுத்துச்செல்ல வேண்டும். இதனால் நெல்லின் இலைப்பகுதி வைக்கோல் பிரியில் பட்டு நிமிரும்போது மடக்கப்பட்ட பகுதி விரிந்துவிடும். இப்புழுக்கள் கீழே விழுந்து மண்எண்ணை கலந்த நீரில் விழுந்து மடிந்துவிடும். எனவே ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையில் இலைச்சுருட்டு புழுவை கட்டுப்படுத்தி பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : leaf mite attack ,Joint Director of Agriculture ,
× RELATED உரங்களில் கலப்படம் செய்தால் உரிமம் ரத்து அதிகாரி எச்சரிக்கை